மதுரை; மேலுார் அ. வல்லாளப்பட்டி கூலானிபட்டியில் உள்ள கருத்தமலையின் தெற்கு பகுதி கன்னிமார் கோயிலில் முற்பாண்டியார் கால கொற்றவை, தவ்வை சிற்பமும், பிற்பாண்டியர்கால ஆவுடையார் பாகம், நந்தி கண்டறியப்பட்டது. சிற்பத்துறை ஆய்வாளர் தேவி, மதுரை இயற்கை பண்பாடு அறக்கட்டளை உறுப்பினர் தமிழ்தாசன் கூறியதாவது: கூலானிபட்டியில் 30 ஏக்கர் பரப்பளவில் 100 அடி உயரமுள்ள கருத்தமலையின் கன்னிமார் பாறை உச்சியில் கன்னிமார் கோயில் உள்ளது. இக்கோயிலில் 1300 ஆண்டுகள் பழமையான தவ்வை, கொற்றவை சிலைகள், 700 ஆண்டுகள் பழமையான வட்ட வடிவ ஆவுடையார், நந்தி, சப்த மாதர்கள் உள்ளிட்ட சிற்பங்கள் மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை குழுவினரால் கண்டறியப்பட்டது. அரிட்டாபட்டி மலையில் இருந்து ஒரு கி.மீ. இடைவெளியில் உள்ள கூலானிப்பட்டி கருத்தமலையில் இந்த சிற்பங்கள் கிடைத்துள்ளன.3 000 ஆண்டுகள் தொன்மையான தாய் தெய்வ வழிபாட்டின் தொடர்ச்சியாக கொற்றவை, தவ்வை, சப்த மாதர்கள் ஒரே வளாகத்தில் கிடைத்துள்ளன. பழமையான செங்கல் கட்டுமான அடித்தளமும் இருக்கிறது. கன்னிமார் பாறையில் காணப்படும் 1300 ஆண்டுகள் பழமையான கோயிலின் இதர பகுதிகள்குறித்து தொல்லியல்துறை ஆய்வு செய்து கன்னிமார் கோயிலை பாதுகாக்கப்பட்ட சின்னமாகஅறிவிக்க நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்றனர்.