சென்னை; ‘‘திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்தன்று, மலை மீது கொப்பரை, திரி, நெய் ஆகியவற்றை எடுத்து செல்லும் நபர்கள் தவிர, பக்தர்களுக்கு அனுமதி இல்லை ’’ என, அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
சென்னையில் அவர் அளித்த பேட்டி: திருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்கு மலை உச்சியில் தீபம் ஏற்றும் நிகழ்வு எவ்விதத்திலும் தடைபடாது. 350 கிலோ எடை கொண்ட கொப்பரை, திரிகள், தேவைக்கு ஏற்ப, 600 கிலோவிற்கு மேற்பட்ட நெய், மலை உச்சிக்கு எடுத்து செல்ல, சம்பந்தப்பட்ட நபர்கள், காவல், வனத் துறையினர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். பக்தர்கள் மலை மீது ஏற அனுமதி கிடையாது. பரணி தீபத்திற்கு, ‘ஆன்லைனில்’ விண்ணப்பித்த, 500 பக்தர்கள், கட்டளைதாரர்கள் மற்றும் உபயதாரர்கள் என 6500 பேர் அனுமதிக்கப்படுவர். கோயிலில் ஆறு இடங்களில், ‘கியூஆர்., கோடு’ உடன் கூடிய நுழைவாயில்கள் அமைக்கப்பட உள்ளன. இவ்வாறு அமைச்சர் கூறினார்.