சபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு: பம்பையில் இருந்து ஏழு கேரள அரசு பஸ்கள் இயக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12டிச 2024 04:12
மூணாறு; பம்பையில் இருந்து ஐய்யப்ப பக்தர்கள் வசதிக்காக குமுளி மற்றும் தமிழகத்திற்கு ஏழு கேரள அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
சபரிமலை செல்லும் ஐய்யப்ப பக்தர்களுக்கு பம்பையில் கேரள அரசு போக்குவரத்து கழகம் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது. அதன்படி 40 பக்தர்களை கொண்ட குழுக்களுக்கு உடனடி பஸ் சேவை, பம்பை திரிவேணியில் இருந்து பஸ் ஸ்டாண்டிற்கு சென்று வர இரண்டு கட்டணம் இல்லா பஸ்கள் ஆகியவை இயக்கப்படுகின்றன. மண்டல, மகர விளக்கு உற்ஸவம் துவங்கி நாள் முதல் டிச.10 வரை பம்பையில் இருந்து பல பகுதிகளுக்கு 61,109 தொடர் சர்வீஸ்கள், தொலை தூர பகுதிகளுக்கு 12,997 சர்வீஸ்கள் இயக்கப்பட்டன. இந்நிலையில் சபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகரித்து வருவதால் பம்பையில் இருந்து குமுளி மற்றும் தமிழகத்திற்கு ஏழு பஸ்கள் இயக்கப்படுகின்றன. கோயம்புத்தூர் 2, தென்காசி, திருநெல்வேலி, தேனி ஆகிய பகுதிகளுக்கு தலா ஒன்று, குமுளிக்கு 2 பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆன் லைன் வாயிலாக டிக்கெட் முன்பதிவு செய்யலாம். தவிர பம்பை பஸ் ஸ்டாண்டில் முன் பதிவு வசதி உள்ளது. புதிதாக இயக்கப்படும் பஸ்கள் நேரம் உள்பட பிற தகவல்களை 0473-5203445 என்ற தொலை பேசி எண்ணில் தொடர்பு கொண்டு அறியலாம்.