ஏகனே.. அனேகனே.. திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றம்: குவியும் பக்தர்கள்
பதிவு செய்த நாள்
13
டிச 2024 10:12
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த, 4 ம் தேதி தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தீபதிருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 13ம் தேதி, பஞ்ச பூதங்கள், ‘ஏகன், அனேகன்’ என்பதை விளக்கும் வகையில், அதிகாலை, 4:00 மணிக்கு, சுவாமி கருவறை எதிரில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. அதிகாலை 03.30 மணி அளவில் ஸ்வாமி சன்னதி மூல கருவறை முன் “ ஏகன் அனேகன்” என்பதை குறிக்கும் வகையில் 5 மடக்குகளில் பஞ்சமுகதீபம் ஏற்றப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. பின்பு அதிகாலை நான்கு மணிக்கு நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், ஆகிய பஞ்ச பூதங்கள், சிவபெருமான் ஒருவனே அதாவது ஏகன், அனேகன் என்பதை கூறும் வகையில், சுவாமி கருவறை எதிரில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதில் குருக்கள் கையில் ஏந்தி, பரணிதீபம் மடக்கில், ஜோதி ரூபமாய் வெளிபிரஹாரம் வலம் வந்த போது ஏராளமான பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா’ என பக்தி கோஷத்துடன் தரினசம் செய்தனர். ‘அனேகன், ஏகன்’ என்பதை விளக்கும் வகையில் மாலை, 6:00 மணிக்கு, 2,668, அடி உயர மலை உச்சியில், மஹா தீபம் ஏற்றப்பட உள்ளது. விழாவையொட்டி சுவாமி சன்னதி முழுவதும், பல்வேறு வண்ண ரோஜா, சாமந்தி பூக்களால் தோரணங்கள் கட்டி அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது. கோவில் வளாகம் முழுவதும், வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கிறது. பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
|