பதிவு செய்த நாள்
16
டிச
2024
11:12
சிதம்பரம்; சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டத்திற்கு பயன்படுத்தும், புதிய வடத்தை, பக்தர் ஒருவர் பொதுத்தீட்சிதர்களிடம் வழங்கப்பட்டது.
சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் மார்கழியில் ஆருத்ரா தரிசனம், ஆனி திருமஞ்சனம் விழாக்கள் வெகு விமர்சையாக நடப்பது வழக்கம். இவ்விரு விழாக்களின்போதும், நடராஜர் மற்றும் சிவகாமசுந்தரி அம்பாள் தேரில் எழுந்தருளி நான்கு வீதிகளின் வழியே தேரோட்டம் நடக்கும். இந்த தேரோட்டத்தில் விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் சுவாமிகளும் தனித்தனி தேர்களில் வீதியுலா வருவர். மார்கழி மாத ஆருத்ரா தரிசனம் வரும், ஜனவரி 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. தேர் திருவிழாவிற்கு, சிதம்பரம் மூர்த்தி கபே உரிமையாளர் மோகன், அவரது மகன் விக்னேஷ் ஆகியோர் 40 டன் எடையுள்ள தேங்காய் நாரில் தயார் செய்த புதிய வடத்தை வழங்கினார். அதில், நடராஜர், சிவகாமசுந்தரி, முருகர் ஆகிய 3 தேர்களுக்கு தலா 460 அடி நீளம், சண்டிகேஸ்வரர் தேருக்கு 180 அடி நீளமுள்ள வடத்தை கோவில் பொது தீட்சிதர்களிடம் வழங்கினர். வடத்திற்கு பொது தீட்சிதர்கள் பூஜை செய்து, நான்கு வீதிகளில் ஊர்வலமாக எடுத்து வந்து பெற்றுக்கொண்டனர். அதன் மதிப்பு 7 லட்சம் ரூபாய்.