பெரியதாழை: சுப்பராயபுரம் கிராமத்தில் விவசாயி ஒருவருடைய வீட்டில் உள்ள வேப்பமரத்தில் பால் வடிந்ததால் கிராம மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து சென்றனர். சுப்பராயபுரம் கிராமத்தைச்சேர்ந்தவர் விவசாயி கந்தசாமி (79). இவரது வீட்டின் சுமார் 10 வருட காலமாக வேப்பமரம் ஒன்று உள்ளது. நேற்று வீட்டில் திருகார்த்திகை தீபம் விளக்கு ஏற்றிய போது இந்த வேப்பமரத்திலிருந்து குபுகுபுவென பால் சுரந்து வடிந்தது. இதனை பார்த்த விவசாயி ஆச்சர்யத்துடன் கிராம மக்களிடம் கூறினார். கிராமத்தில் உள்ள பொதுமக்கள் பால் வடிந்ததை ஆச்சர்யத்துடன் பார்த்து சென்றனர். பெண்கள் சிலர் இந்த வேப்பமரத்திற்கு மஞ்சள் தூள் தடவி குங்குமமிட்டு வழிபட்டனர். விவசாயி கந்தசாமிக்கு மனைவி பிரம்மசக்தி, இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர். இதில் இரண்டாவது மகன் 24 வயது இருக்கும் போதே திடீரென காணாமல் போய்விட்டான். இன்றுவரை பல இடங்களில் தேடியும் கண்டு பிடிக்க முடியாமல் உள்ள நிலையில் தாய் பிரம்மசக்தி மகன் பிரிந்த ஏக்கத்தில் படுத்த படுக்கையாக உள்ளார். இந்நிலையில் இவரின் வேப்பமரத்தில் பால் வடிந்தது அதிசயமாக உள்ளது. தெய்வ அருள் தான் நிச்சயம் திரும்பி வருவான் என்று இக்கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தெரிவித்தனர்.