பதிவு செய்த நாள்
29
நவ
2012
12:11
ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து போரிட்ட வீரர்களுள் முதன்மையானவர் வீரபாண்டி கட்டபொம்மன். இவரது தந்தையான திக்விஜய துரை, அடிக்கடி திருச்செந்தூர் செந்தில்நாதனை தரிசனம் செய்ய செல்வது வழக்கம். ஓர் இரவில் தம் மனைவியோடு தரிசனம் முடித்தபின், தன் மேனியில் அணிந்திருந்த இரத்தின அணிகலன்களை எல்லாம் கழற்றி பெருமானுக்கே உரிமையாக்கி விட்டார். அது கண்ட அவர் மனைவியும், தாம் அணிந்திருந்த நகைகளைக் கழற்றி, இவை எம்பெருமானின் தேவியருக்கு உரிமையாகும் என்று கொடுத்து விட்டாள். ஊர் திரும்பியதும், பல நாடுகளில் இருந்து சிறந்த வைரக்கற்களைக் கொண்டு வரச்செய்து, விலைமதிக்க இயலாத பதக்கத்தையும், முத்து மாலையையும், செய்து மனைவிக்குக் கொடுத்தார். அன்று இரவு அவர் ஒரு கனவு கண்டார். கனவில், திருச்செந்தூர் பெருமான் தோன்றி, உன் தேவி அணிந்திருக்கும் பதக்கத்திற்கும் நம் குறத்தி ஆசைப்படுகிறாளே! என்றானாம்.
எல்லாச் செல்வங்களும் உடையவன் அல்லவா தாங்கள்? என்று துரை கேட்க, ஆண்டியான நான் இவ்வளவு விலையுயர்ந்த பொருளுக்கு எங்கே போவேன்? என்று பதில் கூறி, புன்னகைத்தபடி மறைந்து விட்டானாம். திடுக்கிட்டு எழுந்தார் துரை. மனைவியை எழுப்பி, கண்ட கனவைக் கூறி, மனம் உருகினார். உடனே மனைவி, பதக்கத்தைக் கழற்றி நன்னீராட்டினாள். மறுநாள் பொழுது விடிந்ததும், பதக்கம் ஒரு வெள்ளிப் பேழைக்குள் வைக்கப்பட்டு, திருச்செந்தூர் கோயில் போய்ச் சேர்ந்தது! இன்றும் இந்த ஆபரணங்கள் திருச்செந்தூர் கோயில் கருவூலத்தில் வைக்கப்பட்டு, முருகவேளுக்கும் வள்ளி தெய்வானைக்கும் அணிவிக்கப்படுகின்றன.