அக்பர் சக்ரவர்த்தி தன் ஆஸ்தானப் பாடகர் தான்சேனின் இசையை மிகவும் ரசித்தார். அப்படியே தான்சேனிடமும் மிகுந்த அன்பு கொண்டிருந்தார். ஒருமுறை அவருக்குத் தான்சேனின் குருவான ஹரிதாஸரின் இசையைக் கேட்க ஆசை வந்தது. தான்சேனிடம் அவரை அழைத்து வரச் சொன்னார். அவர் இங்கெல்லாம் வர மாட்டார். நாம்தான் அங்கு போகவேண்டும் என்ற தான்சேனின் கூற்றுக்கிணங்க அக்பர் மாறுவேடத்தில் தான்சேனுடன் அவர் வீட்டிற்குச் சென்றார். அவருடைய தெய்வீக இசையைக் கேட்டு மெய்மறந்தார். திரும்பி வரும் வழியில் அக்பர் தான்சேனிடம், நீங்கள் ஹரிதாஸர் நேர் சிஷ்யர். அவர் தன் வித்தையை வஞ்சனையின்றி உங்களுக்குச் சொல்லிக் கொடுத்ததில் ஐயமில்லை. அப்படியிருந்தும் அவர் பாட்டைக் கேட்டதிலிருந்து உங்கள் பாட்டில் ஏதோ குறையிருப்பது போல் தோன்றுகிறது. அதன் காரணம் என்னவாக இருக்கும் என்று வினவினார். தான்சேன், அதுவா? நான் உங்களுக்காகப் பாடுகிறேன். ஆனால் அவர் இறைவனுக்காகப் பாடுகிறார். அதுதான் வித்தியாசம் என்று பதிலளித்தார்.