சபரிமலையில் தொடர்ந்து அலை மோதும் பக்தர்கள்; தரிசனத்திற்கு பல மணி நேரம் காத்திருப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஜன 2025 10:01
சபரிமலை; தொடர்ந்து அலை மோதும் பக்தர்களால் சபரிமலை திணறி வருகிறது. பல மணி நேரம் காத்திருந்து படியேறி வினாடி நேரம் தரிசனத்திற்கு பக்தர்கள் காத்திருக்கின்றனர்.
மகர விளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலை நடை கடந்த டிசம்பர் 30 மாலை 4:00 மணிக்கு திறந்தது. அன்றைய தினம் பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாக காணப்பட்டதால் நிலக்கல்லிலும், பம்பையிலும் பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். 31-ம் தேதி பக்தர்கள் கூட்டம் ஓரளவு குறைந்ததால் பம்பையில் பக்தர்கள் தடுப்பது கைவிடப்பட்டது. எனினும் பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகமாகவே உள்ளது. பத்தனம்திட்டா - நிலக்கல் - சாலக்கயம் பாதையிலும், எருமேலி - கரிமலை - வலியான வட்டம் வழியிலான பெருவழி பாதையிலும், சத்திரம் - புல் மேடு பாதையிலும் பக்தர்கள் சாரை சாரையாக வந்து கொண்டிருக்கின்றனர். பம்பையில் இருந்து மலையேறி பதினெட்டு படிகளில் ஏறுவதற்கான கியூ கடந்த ஒரு வாரமாக எப்போதும் மரக் கூட்டத்தை தொட்டு காணப்படுகிறது. சில நாட்களில் இந்த கியூ சபரி பீடம் வரை காணப்பட்டது. நேற்று பக்தர்களின் வருகை மிக அதிகமாக இருந்தது. இதனால் ஆறு மணி நேரம் வரை காத்திருந்து தான் 18 படிகளில் ஏறுகின்றனர். பின்னர் சன்னிதானத்தில் பிளை ஓவர் வழியாக ஸ்ரீ கோயில் முன் வரும் போது வினாடி நேர தரிசனம் தான் இவர்களுக்கு கிடைக்கிறது. எனினும் ஐயப்பனை வணங்கிய ஆனந்தத்தில் இவையெல்லாம் ஒரு சிரமமே இல்லை என்று பக்தர்கள் கூறுகின்றனர்.