காரமடை அரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி; சொர்க்கவாசல் திறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஜன 2025 07:01
கோவை ; காரமடை அரங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு விழா நடந்தது. ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாள் சிறப்பு அலங்காரத்தில், சொர்க்கவாசல் வழியாக வெளியே வந்து, பக்தர்களுக்கும் அருள் பாலித்தார்.
கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலம், காரமடை அரங்கநாதர் கோவில். இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும், வைகுண்ட ஏகாதசி வைபவ விழா, விமர்சியாக நடைபெறும். வைகுண்ட ஏகாதசி விழாவின் தொடக்கமாக, திருமொழித் திருநாள் எனும், பகல் பத்து உற்சவம், டிச., மாதம், 31ம் தேதி துவங்கியது. கடந்த பத்து நாட்களாக கோவில் ஸ்தலத்தார்கள் வேதவியாச பட்டர், திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஆகியோர், அரங்கநாதர் சுவாமி முன், தமிழ் வேதமாகிய திவ்ய பிரபந்தத்தில், குலசேகர பெருமாள் அருளிச் செய்த, பெருமாள் திருமொழி, திருமங்கை ஆழ்வார் அருளிச்செய்த திரு நெடுந்தாண்டகம் மற்றும் பெரிய திருமொழி பாசுரங்கள் ஆகியவற்றை சேவித்தனர். நேற்று இரவு, அரங்கநாத பெருமாள், நாச்சியார் திருக்கோலத்தில் மோகனா அவதாரத்தில் எழுந்தருளினார்.
இன்று அதிகாலை, 5:30 மணிக்கு வைகுண்ட ஏகாதசி என்னும், சொர்க்கவாசல் திறப்பு வைபவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர் இன்று இரவு, 11:00 மணிக்கு ராப்பத்து உற்சவமான, திருவாய் மொழித் திருநாள் தொடங்க உள்ளது. 17ம் தேதி இரவு திருமங்கை மன்னன் வேடுபரியும், அரங்கநாத பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி, உலா வரும் உற்சவமும் நடைபெற உள்ளது. 19ம் தேதி இரவு திருவாய் மொழித் திருநாள் சாற்று முறை நிறைவடைகிறது.