பதிவு செய்த நாள்
15
ஜன
2025
10:01
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் மூலமூர்த்திக்கு ( ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரருக்கு) உளுந்து மாவினால் சிவபெருமானின் உருவம் செய்து, பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்தனர். பின்னர், மூலவருக்கு (ஆண்டில் இந்த ஒரு நாள்) வெந்நீரால் அபிஷேகம் செய்தனர். அதன் பிறகு, கோயில் வளாகத்தில் உள்ள நடராஜ சுவாமிக்கு அபிஷேகம் செய்து, தீப தூபம் சமர்ப்பிக்க பட்டது . பின்னர், நடராஜர் சுவாமி நகரில் ஊர்வலம் நடைபெற்றது. பக்தர்கள் இறைவனை தரிசித்து, கற்பூர ஆரத்தி எடுத்து பிரார்த்தனை செய்தனர்.
இது குறித்து கோயில் வேத பண்டிதர் மாருதி சர்மா சுவாமிகள் கூறியதாவது; ஸ்ரீகாளஹஸ்தி கோயிலில் மூலவருக்கும், நடராஜ சுவாமிக்கும் சாஸ்திர முறைப்படி சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன. தட்சிணாயனம் முடிந்து உத்தராயணம் தொடங்கும் நாள். தனுர் மாசத்தில் வரும் ஆருத்ரா நட்சத்திரம், இறைவனுக்கு மிகவும் பிரியமான திங்கட்கிழமை என்பதால் மிகவும் உகந்த நாளாகும் அதிலும் போகிப் பண்டிகை என்பதால் இந்த நாள் மிக அரிதாகவே வரும் மிகவும் சிறப்பு வாய்ந்த நாள். பக்தர்கள் மகாசிவராத்திரி அன்று லிங்கோத்பவத்தை எவ்வாறு தரிசிக்கிறார்களோ அதே போல் இன்றும் மூலவர் சன்னதியில் உளுந்து மாவிலிருந்து தயாரிக்கப்பட்ட சிவலிங்கத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. மேலும் கருவறையில் உள்ள இறைவனுக்கு வெந்நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது என்றார்.