கடல் சீற்றத்தால் நவபாஷாண நவக்கிரங்கள் நீரில் மூழ்கின; பக்தர்கள் ஏமாற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஜன 2025 05:01
தேவிபட்டினம்; கடல் சீற்றத்தால் தேவிபட்டினம் நவபாஷாண நவக்கிரகங்கள் தண்ணீரில் மூழ்கியதால் தரிசனம் செய்ய முடியாமல் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
தேவிபட்டினத்தில் பிரசித்தி பெற்ற நவபாஷாண நவக்கிரகம் அமைந்துள்ளது. இங்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யவும், பல்வேறு தோஷ நிவர்த்தி வேண்டி பரிகார பூஜைகள் செய்யவும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மேலும் ஆடி, தை அமாவாசை தினங்களில் பல ஆயிரம் பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் இரண்டு நாட்களாக வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள கடல் சீற்றத்தால் கடல் நீர்மட்டம் உயர்ந்து அலைகள் அதிகளவில் எழுகின்றன. கடல் நீர்மட்டம் உயர்ந்ததால் நேற்று அதிகாலை முதல் நவகிரகங்கள் தண்ணீரில் மூழ்கின. மூன்று நவக்கிரகங்கள் மட்டுமே தண்ணீருக்கு மேல் லேசாக தெரிந்த வண்ணம் இருந்தன. இதனால் தரிசனத்திற்காக நவபாஷாணம் வந்த பக்தர்கள் முழுமையாக அனைத்து நவக்கிரகங்களையும் பார்த்து தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் கடல் சீற்றம் காரணமாக குறிப்பிட்ட தொலைவு வரை மட்டுமே நடைமேடை வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். நவக்கிரகங்களை நீரில் இறங்கி சுற்றி வரவும், கடலில் இறங்கி நீராடவும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.