பதிவு செய்த நாள்
20
ஜன
2025
10:01
மஹாகும்ப நகர்; உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது. இங்குள்ள பிரயாக்ராஜில் மஹா கும்பமேளா நடக்கிறது.
கடந்த, 13ம் தேதி துவங்கிய இந்த மிகப் பெரிய ஆன்மிக நிகழ்ச்சி, அடுத்த மாதம், 26ம் தேதி வரை நடக்க உள்ளது. மஹா கும்பமேளாவுக்கு, 40 கோடிக்கும் அதிகமானோர் வந்து, திரிவேணி சங்கமத்தில் நீராடுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கங்கை, யமுனை மற்றும் புராணத்தில் கூறப்பட்டுள்ள சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் நேற்று முன்தினம் வரை, ஏழு கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடியுள்ளனர். நேற்று மட்டும் 46.95 லட்சம் பேர் புனித நீராடினர். கும்பமேளாவுக்காக உருவாக்கப்பட்டுள்ள மஹாகும்ப நகரில் ஏராளமான கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ‘செக்டார் – 19’ல் உள்ள ஒரு கூடாரத்தில், சமையல் எரிவாயு சிலிண்டர்கள் நேற்று திடீரென வெடித்து சிதறின.
இதை தொடர்ந்து கூடாரத்தில் தீ பிடித்தது. நொடிப் பொழுதில் அடுத்தடுத்த கூடாரங்களுக்கும் தீ பரவியது. அந்த பகுதி முழுதும் தீப்பிழப்பாக காட்சி அளித்தது. அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் பதறியடித்து ஓடினர். உடனடியாக, 15க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் களம் இறங்கி தீயை அணைத்தனர். அதற்குள், 100க்கும் மேற்பட்ட கூடாரங்கள் தீயில் எரிந்து நாசமாகின. அதிர்ஷ்டவமாக உயிரிழப்புகள் ஏற்படவில்லை. இது குறித்து பிரயாக்ராஜ் மாவட்ட கலெக்டர் ரவீந்திர குமார் கூறுகையில், ‘‘செக்டார் – 19ல் அமைந்துள்ள கீதா பிரஸ் கூடாரத்தில் மாலை, 4:30 மணிக்கு இரண்டு சிலிண்டர்கள் வெடித்தன. அருகில் இருந்த கூடாரங்களுக்கும் தீ பரவியது. இந்த பகுதியில் முன் எச்சரிக்கையாக தீயணைப்பு வாகனங்கள் ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது,’’ என்றார். தீ விபத்து நடந்த இடத்தை முதல்வர் யோகி ஆதித்யநாத் பார்வையிட்டார். பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து தகவல் அளிக்கும்படி மூத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆதித்யநாத்தை தொலைபேசி வாயிலாக பிரதமர் மோடி தொடர்பு கொண்டு, விபத்து குறித்த விபரங்களை கேட்டறிந்தார். ‘‘நிலைமை கட்டுக்குள் உள்ளது. துறவிகளுக்கும், பக்தர்களுக்கும் வேண்டிய உதவிகளை செய்ய சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்,’’ என, துணை முதல்வர் பிரஜேஷ் பதக் தெரிவித்தார்.
ஏ.ஐ., தொழில்நுட்பம்! மஹா கும்பமேளாவில் கூட்டத்தை நிர்வகிப்பதுதான் மிகப் பெரும் சிக்கலான பணி. எந்த ஒரு சிறிய அசம்பாவித சம்பங்களும் நடக்காமல் தடுப்பதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இது குறித்து போலீஸ் உயரதிகாரிகள் கூறியுள்ளதாவது:மொத்தம், 10,000 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது மஹா கும்பமேளா நகர். இங்கு ஒரு கோடிக்கும் மேற்பட்ட மடாதிபதிகள், சாமியார்கள் மற்றும் பக்தர்கள் தங்கும் வசதி உள்ளது. இதைத் தவிர, தினமும், 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.தள்ளுமுள்ளு ஏற்படாமல் கண்காணிப்பதற்காகவே, நான்கு ஒருங்கிணைந்த கண்காணிப்பு மையங்கள் தற்போது அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மையத்திலும், தலா, 400 பேர் மிகப் பெரிய திரைகளில் கிடைக்கும் காட்சிகளை பார்த்து கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.மஹா கும்பமேளா நகரில், 3,000க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள், நீருக்கடியில் செயல்படும், ‘ட்ரோன்’ எனப்படும், ஆளில்லா சிறிய விமானங்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதைத் தவிர, 60 ஆயிரம் போலீசார் கண்காணிப்பு மற்றும் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவது உள்ளிட்ட பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.கண்காணிப்பு கேமராக்களில் பெரும்பாலானவை, ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் இயங்கக் கூடியவை. இவற்றின் வாயிலாக கிடைக்கும் தகவல்கள், நான்கு கண்காணிப்பு மையங்களிலும் பகுப்பாய்வு செய்யப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிர்ணயிக்கப்பட்டதைவிட அதிக கூட்டம் கூடினால், உடனடியாக திரையில் எச்சரிக்கை மணி அடிக்கும். அந்தத் தகவல் உடனடியாக களத்தில் உள்ள போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டு, கூட்ட நெரிசலை தடுக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதற்காக, 13 வகையான மாதிரிகள் உருவாக்கப்பட்டு, ஒவ்வொரு சூழ்நிலையிலும் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பயிற்சி போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.