திருக்கோஷ்டியூர்; திருக்கோஷ்டியூர் அருகே தி.வைரவன்பட்டி திருமெய்ஞானபுரீஸ்வரர் கோயிலில் தை மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவருக்கு மகாபைரவ யாகம் நடந்தது. சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் பைரவர் தனி சன்னதியில் ஸ்ரீமூலபால கால பைரவர் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். தேய்பிறை அஷ்டமியில் யாகத்துடன் சிறப்பு வழிபாடு நடைபெறும். தை தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு மூலவரான மூலபால கால பைரவர் தங்க கவசத்தில் எழுந்தருளினர். தொடர்ந்து மகா கணபதி பூஜை நடந்து தீபாராதனைக்கு பின் மகா பைரவயாகம் நடந்தது. பின்னர் கோ பூஜை, லட்சார்ச்சனை நடந்தது. தொடர்ந்து சிவாச்சாரியார்களால் நெய், வஸ்திரயாகம், புஷ்பயாகம் நடந்தது பூர்ணாகுதி தீபாதராதனையை பக்தர்கள் தரிசித்தனர். யாகசாலையிலிருந்து கலசங்கள் புறப்பாடாகி பிரகார வலம் வந்து மூலவருக்கு அபிேஷகம் நடந்தது. பின்னர் மூலவர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மகா தீபம் காட்டப்பட்டது. திரளாக பக்தர்கள் பங்கேற்றனர்.