சிதிலமடைந்த பழமை வாய்ந்த பெருமாள் கோயில்; சீரமைக்க பக்தர்கள் வலியுறுத்தல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஜன 2025 04:01
திருவாடானை; திருவாடானை அருகே உள்ள புதுப்பையூரில் பழமை வாய்ந்த மாதவப் பெருமாள் கோயில் புதர் மண்டியுள்ளது. புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். திருவாடானை அருகே உள்ள புதுப்பையூரில் 600 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான மாதவப் பெருமாள் கோயில் உள்ளது. சிதிலமடைந்த இக்கோயிலை புதுப்பிக்க திட்டமிடப்பட்டு 10 ஆண்டுகளுக்கு பணிகள் துவங்கியது. பள்ளம் தோண்டும் போது பூமிக்கடியில் இரண்டு அடி உயரமுள்ள ஐம்பொன்னால் ஆன பெருமாள் மற்றும் சில சிலைகள் கிடைத்தது.
வருவாய்த் துறையினர் அந்த சிலைகளை மீட்டனர். அத்துடன் புதுப்பிக்கும் பணிகள் நிறுத்தப்பட்டது. கருவறையில் இருந்த மாதவப்பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சிலைகள் தற்போது சிறிய தகர கொட்டகையில் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து புதுப்பையூர் கிராம மக்கள் கூறியதாவது: பத்து ஆண்டுகளுக்கு முன்பு பாலாலயம் செய்யபட்டு பணிகள் துவங்கியது. ஐம்பொன் சிலைகள் கிடைத்ததால் பணிகள் நிறுத்தப்பட்டன. மீண்டும் அதற்கான பணிகள் துவங்கவில்லை. கோயில் திருப்பணிக்காக ஒதுக்கப்பட்ட நிதி என்ன ஆனது என்று தெரியவில்லை. தற்போது கோயில் வளாகத்தில் செடிகள் அடர்ந்துள்ளது. பண்டைய காலத்தில் இக்கோயிலில் திருவிழாக்கள் சிறப்பாக நடந்துள்ளது. கோயில் முன்புள்ள இடத்தில் கலைநிகழ்ச்சிகள் நடந்துள்ளன. அந்த இடத்தை கூத்தாடி பொட்டல் எனக் கூறுவார்கள். தற்போது கோயில் இருந்த இடம் தெரியாமல் புதர் மண்டியும், சுவாமி சிலைகள் பாதுகாப்பு இல்லாமல் உள்ளது. கோயிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த ஹிந்து சமய அறநிலையத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.