கர்நாடகா சங்கீதத்தின் பிதாமகனாக கருதப்படும் புரந்தரதாசரின் ஆராதனை விழா திருமலையில் நடைபெற்றது. கர்நாடக மாநிலம், பெல்லாரி மாவட்டம், ஹம்பிக்கு அருகில் புரந்தரகடாவில், வரதப்பா - கமலாம்பாள் தம்பதிக்கு, பிறந்தார். இவரது தந்தை மிகப்பெரிய வர்த்தக வியாபாரி. ஆகவே, நல்ல செல்வந்தராக திகழ்ந்த குடும்பம். இசை, கன்னடம், வடமொழி என்று தாசர் புலமை பெற்று விளங்கினார். தந்தையின் வியாபாரத்தை எடுத்து நடத்தி நவகோடி நாராயணனாக திகழ்ந்தார். கருமி குணம் படைத்த இவர் இறையருளால் ஞானம் பெற்ற பின் சொத்துக்கள் அனைத்தையும் தானதர்மமாக வழங்கிவிட்டு பக்தி மார்கத்தில் இறங்கிவிட்டார். தன்னை ஆட்கொண்ட விட்டலின் மீது ஆரம்பித்து பல ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார். வேதம், உபநிஷத்துகளின் கருத்துக்களை எடுத்து, எளிய கீர்த்தனைகள் மூலம் பாமரர்களுக்கும் புரியும்படி பாடினார். லட்சத்திற்கும் அதிகமான பாடல்களை இவர் இயற்றியிருந்தாலும் தற்போது எட்டாயிரம் பாடல்கள் மட்டுமே நம்மிடம் உள்ளன. இவரது கீர்த்தனைகள் தாசர் பதகளு, தேவர் நாமாக்கள் என்றழைக்கப்படுகின்றன. ’மாயா மாளவ கௌளை ராகம் இசைப் பயிற்சிக்கு தகுந்தது என்று தேர்ந்தெடுத்து, மாணவ, மாணவியருக்கான பாடாந்திர முறையை அப்பியாச கான வடிவங்களை முறைப்படுத்தி, ஒரு திட்டமாக வகுத்துக் கொடுத்த ஆதி குரு, சங்கீத பிதாமகர் இவரே. இன்றைக்கு பாட்டு கற்றுக்கொள்ளும் அனைவரும் பாடும், சரளி, ஜண்டை, கீழ் ஸ்தாயி வரிசைகள், அலங்காரங்கள், கீதங்கள் ஆகியவை இவரால் இயற்றப்பட்டது. நேற்று நடைபெற்ற புரந்தரதாசரின் ஆராதனை மஹோத்ஸவத்தில் பலபாடல்கள் பாடப்பட்டன. விழாவில் கூடுதல் இஓ வெங்கையா சவுத்ரி, தாசா சாகித்திய சிறப்பு அதிகாரி ஆனந்த தீர்த்தாச்சார் மற்றும் 3500க்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.