பதிவு செய்த நாள்
01
பிப்
2025
08:02
தொண்டாமுத்தூர்; பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், கும்பாபிஷேகத்தையொட்டி, புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
சுமார், 1,800 ஆண்டுகள் பழமை வாய்ந்த பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், வரும், 10ம் தேதி, கும்பாபிஷேக விழா மிக பிரம்மாண்டமாக நடக்க உள்ளது. இதற்காக, பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. கோவில் உள்பிரகாரம் மற்றும் வெளிபிரகாரம் வர்ணம் பூசப்பட்டுள்ளது. கோவில் வளாகத்தில், யாகசாலை மண்டபம் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், கோவிலில் இருந்த கொடி மரம், நிறுவப்பட்டு பல ஆண்டுகளாகிவிட்டதால், கொடிமரத்தை மாற்றி அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக, கடந்தாண்டு, ஜனவரி மாதம், கேரளா மாநிலம், சபரிமலை அருகே உள்ள பாலா என்ற பகுதியில் இருந்து, 57 அடி உயரமும், 5.5 அடி விட்டமும் கொண்ட தேக்கு மரம், பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு கொண்டுவரப்பட்டது. 4 லட்சம் ரூபாய் மதிப்பு கொண்ட இந்த மரத்தை, உபயதாரர் கோவிலுக்கு தானமாக வழங்கினார். இதனை, கடந்த ஓராண்டாக, கோவில் அருகே உள்ள மண்டபத்தில் வைத்து, உரிய முறையில், தயார் செய்தனர். இதனையடுத்து, நேற்று காலை, 10:00 மணிக்கு, கோவிலில் உள்ள பழைய கொடி மரத்தை, கிரேன் இயந்திரத்தின் உதவியுடன் அகற்றும் பணி நடந்தது. மாலையில், பழைய கொடிமரம் பாதுகாப்பாக அகற்றப்பட்டது. தொடர்ந்து, மாலை, 7:00 மணிக்கு, தயார் நிலையில் இருந்த, 47 அடி உயரமுள்ள புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதற்காக, பேரூர் கோவில், சிறுவாணி ரோட்டில், காலை முதல் மாலை வரை, கனரக வாகனங்கள் அனுமதிக்கப்பட்டாமல், மாற்றுப்பாதையில் அனுப்பப்பட்டது.