திருவாவடுதுறை ஆதீன பட்டண பிரவேசம்; பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05பிப் 2025 10:02
மயிலாடுதுறை; திருவாவடுதுறை ஆதீனத்தில் கோலாகலமாக நடைபெற்ற பட்டண பிரவேச நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா திருவாவடுதுறை ஆதீனத்தை14ம் நூற்றாண்டில் தோற்றுவித்தவர் நமச்சிவாய மூர்த்திகள். அவரது குருபூஜை விழா கடந்த மாதம் 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது. 10ம் நாளான நேற்று காலை நமசிவாய மூர்த்திகளுக்கு குருபூஜை விழா சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இரவு பட்டணப்பிரவேசம் நிகழ்ச்சி நடந்தது. இதனை முன்னிட்டு கோமுக்தீஸ்வரர் கோவில் வழிபாடு நடத்திய திருவாவடுதுறை ஆதீனம் 24வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் 1 லட்சத்து 8 ருத்ராட்ச மணிகளால் ஆன தலைவடம், பவளமணி, கெண்டைமணி, பட்டு தலைக்குஞ்சம் அலங்காரத்துடன் தங்கப் பாதரட்சை அணிந்து, சிவிகை பல்லக்கில் எழுந்தருளினார். தொடர்ந்து, முன்னே குதிரைகள் ஆட்டத்துடன், வான வேடிக்கை முழங்க, பக்தர்கள் பல்லக்கினை சுமந்து செல்ல பட்டணப்பிரவேசம் நடைபெற்றது. நிறைவாக கொலு மண்டபத்தில் சிவஞானக் கொலுக்காட்சி நடந்தது. டிஎஸ்பி. சுந்தரேசன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.