பதிவு செய்த நாள்
10
பிப்
2025
03:02
நவக்கிரகங்களில், சூரியன் சிவாம்சம் கொண்டவர். இவர் தை மாதத்தில் தன் வடதிசைப் பயணத்தை தொடங்குகிறார். இதனை உத்ராயண புண்ணிய காலம் என்பர். இவர் இந்த மாதத்தில் மகரராசியில் இருக்கிறார். சக்தியின் அம்சமாக திகழ்பவர் சந்திரன். தைப்பூச நாளில் சந்திரன் ஆட்சி பலத்தோடு கடகராசியில் சஞ்சரிக்கிறார். அன்று, மகரத்தில் இருக்கும் சூரியனும், கடகத்தில் இருக்கும் சந்திரனும் ஒருவருக்கொருவர் பலத்தோடு பார்த்துக்கொள்வர். இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? அம்பிகை சிவகாமி கண்டு களிக்க,பரம்பொருளான சிவன், நடராஜராக ஆனந்த தாண்டவம் ஆடுகிறார். மார்கழி திருவாதிரையில் இறைவன் தனித்து ஆடுகிறார். தைப்பூசநாளில் சிவபார்வதி இணைந்து ஆடுவதாகவும் சொல்வர். நடனமாடினால் மகிழ்ச்சி பிறக்கும். அந்த மகிழ்ச்சியில் திளைக்கும் இறைவனிடம் நாம் வேண்டியதைப் பெறலாம் என்பதால் இந்நாளை வழிபாட்டுக்குரிய நாளாக நிர்ணயித்தனர். அம்மையப்பரான சிவபார்வதி, ஈன்றெடுத்த ஞானக்குழந்தை முருகன். அவ்வகையில், பெற்றோருக்குரிய தைப்பூசம் பிள்ளைக்கும் சிறப்பான நாளாக அமைந்தது. தைப்பூசநாளில் சிவபார்வதி, முருகப்பெருமானை தரிசித்து வேண்டிய வரம் பெறுவோம்.
தைப்பூசத்திருவிழா, பழநியில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சிவன் நடராஜராக நடனமாடிய நாள் மார்கழி திருவாதிரை. சிவனும், அம்பிகையும் இணைந்தாடிய நாள் தைப்பூசம். இவ்வகையில், தைப்பூசம் சிவசக்திக்குரிய நாளாகிறது. இதனால்தான் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், திருவிடைமருதூர், திருப்புடைமருதூர் சிவாலயங்களில் இந்த விழா விசேஷமாக நடக்கிறது. ஆனால், பழநியில் மட்டும் முருகன் கோயிலில் இவ்விழா பிரசித்தமாகி விட்டது. இதற்கு காரணம் என்ன தெரியுமா! பழநிமலை அடிவாரத்தில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் பெரியநாயகி அம்பாள் சமேத கைலாசநாதர் கோயில் உள்ளது. இங்கு சிவன், அம்பாள் சந்நிதியின் நடுவில் முருகன் சந்நிதி உள்ளது. பிரதான வாசலும், கொடிமரமும் முருகன் எதிரில் உள்ளதால் கோயிலுக்கு வருபவர்கள் முதலில் முருகனை வழிபட்டனர். காலப்போக்கில், முருகன் சந்நிதி எதிரிலுள்ள கொடிமரத்தில் தைப்பூசத் திருநாள் கொடி ஏற்றப்பட்டது. தகப்பனை வழிபட வந்தவர்கள், தகப்பன் சுவாமியான முருகனுக்கு முக்கியத்துவம் தந்து வழிபட்டனர். காலப்போக்கில், தைப்பூசத்திருநாள் முருகனுக்குரியதாக மாறி விட்டது. தற்போதும் தைப்பூசவிழா, பெரியநாயகி அம்மன் கோயிலிலேயே நடக்கிறது. இங்குள்ள உற்சவர் முத்துக்குமாரசுவாமி தினமும் எழுந்தருள்கிறார்.
தைப்பூச சிறப்புகள்; முருகப் பெருமான் வள்ளியை திருமணம் புரிந்ததால் ஊடல் கொண்ட தெய்வயானையை சமாதானம் செய்து முருகப் பெருமான் வள்ளி - தெய்வானை சமேதராக தைப்பூசத்தன்றுதான் காட்சியளித்தாராம். தைப்பூசத்தன்று ஸ்ரீ ரங்கநாதர் தனது தங்கையான சமயபுரம் மாரியம்மனுக்கு சீர் வரிசைகள் கொண்டு போய் கொடுப்பார். ராமலிங்க அடிகளார் ஸ்ரீமுக (1874) ஆண்டு தை மாதம் 19-ம் நாள் ஒரு தைப்பூச நாளில் அருள் ஜோதியில் கலந்தார். ஆண்டுதோறும் தைப்பூச நன்னாளில் வடலூரில் ஜோதி தரிசனம் நிகழும். ஒரு தைப்பூச நன்னாளில்தான் மயிலாப்பூரில் திருஞானசம்பந்தர் பூம்பாவை என்ற பெண்ணை அஸ்தி கலசத்திலிருந்து உயிர்மீட்டார். தமிழகத்தைப் போலவே மலேசியாவிலும் தைப்பூசத் திருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது. அன்று, பத்துமலை முருகன் வெள்ளி ரதத்தில் கோலாகலமாக பவனி வருகிறார்.