தைப்பூசம்; 32 அடி உயர பிரம்மாண்ட சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11பிப் 2025 01:02
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டத்திலேயே மிக உயரமான 32அடி உயர முருகன் சிலை அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து வந்து வழிபாடு செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை கூறைநாடு கஸ்தூரிபாய் தெருவில் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் முருகப்பெருமானுக்கு 32 அடி உயரத்தில் பிரம்மாண்ட சிலை அமைக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தின் மிக உயரமான சிலை அமைந்துள்ள இந்த கோவிலில் தைப்பூச விழா வழக்கமான பக்தி பரவசத்துடன் இன்று கொண்டாடப்பட்டது. இதனை ஒட்டி, பால் காவடி பன்னீர் காவடி புஷ்பக் காவடி அலகு காவடி உள்ளிட்ட பல்வேறு வகையான காவடிகளை பக்தர்கள் எடுத்து வந்து வழிபாடு செய்தனர். காவிரி கரையில் சிறப்பு பூஜைகளுக்கு பிறகு காவடி ஊர்வலம் துவங்கியது. மேளதாளங்கள் முழங்க முக்கிய வீதிகள் வழியாக காவடி ஊர்வலம் நடைபெற்றது. இதில் காவடி எடுத்து வந்த பக்தர்கள் மேளத்திற்கு தகுந்தபடி பக்தி பரவசத்துடன் ஆடியப்படியே வந்தனர். தொடர்ந்து முக்கிய வீதிகள் வழியாக காவடி ஊர்வலம் ஆலயத்தை வந்து அடைந்தது அங்கு சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.