பதிவு செய்த நாள்
19
பிப்
2025
11:02
கோவை; கோவை, கோனியம்மன் கோவில் தேர் திருவிழாவையொட்டி, பூச்சாட்டு விழா நடந்தது. கோவையின் காவல் தெய்வமாக விளங்கி வரும் கோனியம்மன் கோவில் தேர் திருவிழா, வரும் மார்ச், 5ம் தேதி கோலாகலமாக நடக்க உள்ளது. இதனையொட்டி, கடந்த, 10ம் தேதி, தேர் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று, கோனியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து மாலையில், தேவேந்திரர் வீதியிலிருந்து கம்பம் கொண்டு வரப்பட்டு, காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, விநாயகர் சப்பரத்தில் எழுந்தருளி, வைசியாள் வீதி, ஒப்பணக்கார வீதி ராஜவீதி வழியாக, மேளதாளங்களுடன் ஊர்வலமாக, கோவில் வளாகத்திற்குள் வந்தார். தொடர்ந்து, கோவில் வளாகத்தில், கம்பம் நடப்பட்டு, கம்பத்திற்கு மஞ்சள் நீரூற்றி, மஞ்சள் பூசி, பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கம்பத்திற்கு மஞ்சள் நீர் ஊற்றி வழிபட்டனர். வரும், 25ம் தேதி இரவு, 7:00 முதல் 9:00 மணிக்குள், கொடியேற்றம் நடக்கிறது.