பதிவு செய்த நாள்
19
பிப்
2025
11:02
திருவள்ளூர்; திருவள்ளூர் அருகே பட்டரைப்பெரும் புதுார் முருகன் கோவிலில், பழங்கால சுரங்கப்பாதை இருப்பதை, தொல்லியல் துறையினர் கண்டறிந்துள்ளனர்.
சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிக்காக, சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. இந்த பணிக்காக, திருவள்ளூரை அடுத்த, பட்டரைபெரும்புதுாரில் உள்ள, 9, 10ம் நுாற்றாண்டைச் சேர்ந்த சுப்பிரமணிய சுவாமி கோவிலை அகற்றப் போவதாக, நெடுஞ்சாலைத் துறையினர் அறிவித்து இருந்தனர். பழமையான கோவில் என்பதால், இடிப்பதற்கு அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனிடையே, கோவிலுக்குள் சுரங்கப்பாதை இருப்பதாக, முன்னோர்கள் சொன்ன தகவலை, அப்பகுதியினர் தொல்லியல் துறை அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். இதையடுத்து, திருவள்ளூர் மாவட்ட தொல்லியல் அலுவலர் பொ.கோ.லோகநாதன் மற்றும் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். அப்போது, கோவில் கருவறைக்குள் சுரங்கப்பாதை இருப்பதை கண்டறிந்தனர். இது, 1.5 மீட்டர் அகலம், 7 அடி ஆழம் கொண்டதாக உள்ளது.
இதுகுறித்து, தொல்லியல் துறை அதிகாரிகள் கூறியதாவது: முருகன் கோவில், 9, 10ம் நுாற்றாண்டைச் சேர்ந்தது என்பதால், முக்கிய ஆவணங்கள் அல்லது நகைகள், சிலைகளை காப்பதற்காக, சுரங்கப்பாதை ஏற்படுத்தப்பட்டு இருக்கலாம். போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல், சுரங்கப்பாதை உள்ளே சென்று பார்க்க முடியாத சூழல் உள்ளது. இது எவ்வளவு துாரம் செல்லும் என தெரியவில்லை. அரசின் அனுமதி பெற்று, பாதுகாப்பு வசதிகளுடன் சென்று, அடுத்த கட்ட ஆய்வு செய்வோம். இவ்வாறு அவர்கள் கூறினர். இதையறிந்த கிராமத்தினர், இந்த சுரங்கப்பாதையை ஆச்சரியத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.
கிராமத்தினர் கூறுகையில், ‘இந்த சுரங்கப்பாதை திருப்பாச்சூர், திருவாலங்காடு வரை நீடித்திருக்க வாய்ப்புள்ளது. இது, மிக பழமை வாய்ந்த கோவில் என்பதால், சாலை விரிவாக்கம் என்ற பெயரில் கோவிலை அகற்றக்கூடாது’ என்றனர்.