பதிவு செய்த நாள்
19
பிப்
2025
06:02
பொள்ளாச்சி; பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, கம்பம் நடப்பட்டது. இதையடுத்து, பக்தர்கள் மஞ்சள் நீர் ஊற்றி வழிபாடு செய்தனர்.
பொள்ளாச்சியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் தேர்த்திருவிழா கடந்த, 11ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. கடந்த, 17ம் தேதி இரவு, அணி எடுப்பு நிகழ்ச்சியும்; நேற்று இரவு, கரியகாளியம்மனுக்கு அபிஷேகமும் நடைபெற்றது. அங்கு இருந்து, கம்பம் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, தெப்பக்குளம் விநாயகர் கோவிலில் வழிபாடு செய்து, மாரியம்மன் கோவில் முன் நடப்பட்டது. கம்பம் நடுவதற்கு முன், பெண்கள் கோவில் முன்பாக கும்மியாட்டத்தில் ஈடுபட்டனர். கம்பம் நடப்பட்டதை தொடர்ந்து, இன்று அதிகாலை முதல் கம்பத்துக்கு மஞ்சள் நீர் ஊற்றியும், வேப்பிலை வைத்து, உப்பு கொட்டியும் பக்தர்கள் வழிபட்டனர். இன்று காலை, 6:00 மணிக்கு கரியகாளியம்மனுக்கு அபிஷேக, அலங்கார வழிபாடு மற்றும் மாவிளக்கு பூஜை நடைபெற்றது. 21ம் தேதி இரவு, 9:00 மணிக்கு கரியகாளியம்மன் கடைசிநாள் அபிஷேகம்; 25ம் தேதி பூவோடு வைத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. வரும், 28ம் தேதி மாலை, 6:00 மணிக்கு வெளிப்பூவோடு துவங்குகிறது. இரவு,11:00 மணிக்கு கிராம சாந்தி நடக்கிறது. மார்ச் 1ம் தேதி காலை, 10:30 மணிக்கு கொடி கட்டுதல், 2ம் தேதி மாலை, 6:00 மணிக்கு ஏ.பி.டி., பூவோடு; 3ம் தேதி காலை, 9:00 மணிக்கு ஆயக்கால் போடுதல் நிகழ்ச்சி நடக்கிறது. வரும், 4ம் தேதி காலை, 9:00 மணிக்கு மகுடம் வைத்தல், 5ம் தேதி காலை, 5:00 மணிக்கு மாவிளக்கு, காலை, 10:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது. இரவு, 7:00 மணிக்கு முதல் நாள் தேரோட்டம் துவங்குகிறது. 7ம் தேதி மூன்றாம் நாள் தேரோட்டம், பாரிவேட்டை, தெப்பத்தேர் வைபவம் நடக்கிறது. வரும், 8ம் தேதி காலை, அம்மன் மஞ்சள் நீராடுதல், இரவு கம்பம் எடுத்தல் நிகழ்ச்சியும்; 10ம் தேதி இரவு, மஹா அபிஷேகமும் நடைபெறுகிறது.