பதிவு செய்த நாள்
03
மார்
2025
12:03
கூடலுார்; கூடலுார், நந்தட்டி ஸ்ரீ அருள் முருகன் கோவில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
கூடலுார், நந்தட்டி ஸ்ரீ அருள் முருகன் கோவில் கும்பாபிஷேகம் திருவிழா நேற்று முன்தினம், துவங்கியது. காலை, 7:00 மணிக்கு தீர்த்த குடம் எடுத்து வருதல், முளைப்பாரி ஊர்வலம், தொடர்ந்து கணபதி ஹோமம் நடந்தது. மாலை, 4:00 மணிக்கு விநாயகர் வழிபாடு, யாகசாலை முதல் கால பூஜைகள் நடந்தது. நேற்று, காலை, 7:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, தீபாராதனை, முளைப்பாரி ஊர்வலமாக எடுத்து வரும் நிகழ்ச்சிகள் நடந்தது. தொடர்ந்து, யாக சாலையில் இருந்து, கும்பாபிஷேக கலச நீர் ஊர்வலமாக கோவிலை சுற்றி எடுத்து வரப்பட்டது. காலை 9:20 மணிக்கு கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது. பக்தர்கள் அரோகரா கோசத்துடன் முருகனை தரிசனம் செய்தனர். தொடர்ந்து, முருகனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்திருந்தனர்.