பதிவு செய்த நாள்
03
மார்
2025
12:03
பொள்ளாச்சி; பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவையொட்டி, அலகு குத்தியும், பறவை காவடி, பூவோடு எடுத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலில் கடந்த பிப்., மாதம், 11 தேதி நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தேர்த்திருவிழா துவங்கியது. விழாவை முன்னிட்டு, கடந்த மாதம் 17ம் தேதி அணி எடுப்பு நிகழ்ச்சியும்; கடந்த 18 ம் தேதி இரவு, 9:00 மணிக்கு கரியகாளியம்மன் அபிஷேகமும், இரவு, 11:00 மணிக்கு மாரியம்மன் கோவிலில் கம்பம் நடுதல் நிகழ்ச்சியும் நடந்தது. அதன்படி, தினமும், வேப்பிலை, மஞ்சள் கலந்த புனித நீரை எடுத்து வந்து கம்பத்தில் ஊற்றி பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். கடந்த மாதம் 19ம் தேதி கரியகாளியம்மன் மாவிளக்கு எடுத்தல், இரவு, 9:00 மணிக்கு அபிேஷகம், 25ம் தேதி பூவோடு வைத்தல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, வெளிப்பூவோடு நிகழ்ச்சி துவங்கியது. அப்போது, கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் சார்பில், நுாற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பூவோடு எடுத்து அம்மனை வழிபட்டனர். பக்தர் ஒருவர், தனது உடலில் அலகு குத்தி, 108 பூவோடுகள் எடுத்துக் கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினார்.
அதேபோல, நேற்றுமுன்தினம் இரவு மார்க்கெட் ரோடு திருவள்ளுவர் திடலில், பக்தர்கள் தங்களது உடலை வருத்தி அலகு குத்தி, பறவை காவடி, வேல் காவடி, மயில் காவடி எடுத்து, விதவிதமான அலங்கார வளைவுகளில் அமர்ந்தும், அந்தரத்தில் தொங்கிய படியும், கிரேன் வாகனங்களில் ஊர்வலமாக வந்தனர். மேலும், பக்தர்கள் ரத்தம் சொட்ட, சொட்ட சாட்டையால் தங்களை அடித்துக் கொண்டும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். மார்க்கெட் ரோடு, திருவள்ளுவர் திடலில் தொடங்கிய ஊர்வலம் வெங்கட்ரமணன் வீதி, பஸ் ஸ்டாண்ட், காந்தி சிலை, உடுமலை ரோடு, கடைவீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக கோயில் வளாகத்தில் நிறைவடைந்தது. இதில் உள்ளூர் மற்றும் வெளியூரைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானப் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு மாரியம்மனை வழிபட்டனர். சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளி அம்மன் அருள்பாலித்தார். கொடிகட்டுதல் நிகழ்ச்சி நேற்றுமுன்தினம் நடந்தது. இன்று (3ம் தேதி) ஆயக்கால் போடுதலும், 4ம் தேதி மகுடம் வைத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. வரும், 5ம் தேதி காலை, 6:00 மணிக்கு மாவிளக்கு, காலை, 10:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், இரவு, 7:00 மணிக்கு தேரோட்டம் துவக்க நிகழ்ச்சியும் நடக்கிறது. வரும், 6ம் தேதி தேரோட்டம் இரண்டாம் நாள், 7ம் தேதி தேரோட்டம் மூன்றாம் நாள், தேர் நிலைக்கு வருதல், பாரிவேட்டை, தெப்பத்தேர் வைபவம் நடக்கிறது. 8ம் தேதி காலை, 8:30 மணிக்கு அம்மன் மஞ்சள் நீராடுதல், கம்பம் எடுத்தல் நிகழ்ச்சியும், 10ம் தேதி மஹா அபிேஷகமும் நடக்கிறது.