பதிவு செய்த நாள்
06
மார்
2025
11:03
மதுரை; ஆதரவற்றவர்களுக்கு செய்யும் சேவையில்தான் இறைவன் மகிழ்ச்சி அடைகிறார் என்று மதுரை அழகர் கோவில் அருகே நடைபெற்ற காஞ்சி மகா பெரியவர் கோவில் பூமி பூஜை தொடக்க விழாவில் மதுரை ராமகிருஷ்ண மடம் தலைவர் சுவாமி நித்ய தீபானந்தா பேசினார்
மதுரை அழகர்கோவில் அருகே பொய்கைக் கரைப்பட்டியில், ஸ்ரீமகா பெரியவா கோயில் கட்டுமான பணி பூமி பூஜை நடந்தது. சத்திரப்பட்டி சாலையில் உள்ள அழகர்கோவில் தெப்பக்குளம் எதிரே, அரசுப் பள்ளிக்கு அடுத்துள்ள சிட்டி பால்ஸ் வளாகத்தில் இக்கோயில் அமைய இருக்கிறது. இன்று காலை 9 மணி மணிக்கு, சிறப்பு ஹோமங்கள், ஆராதனைகள், மஹன்யாசம் உள்ளிட்ட வைபவங்கள் நடைபெற்றன.மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு வரவேற்றார் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் புதூர் வி.ராமகிருஷ்ணன், ஆடிட்டர் சேது மாதவா, நந்தினி ரியல் எஸ்டேட் அதிபர் எம்.ஆர்.பிரபு, ஜெயபாரத் ஹோம்ஸ் நிர்வாக இயக்குநர் ஜெயக்குமார், மகா பெரியவா குரூப் சேர்மன் கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மதுரை ஸ்ரீராமகிருஷ்ண மடம் தலைவர் சுவாமி ஸ்ரீ நித்ய தீபாநந்தா குத்துவிளக்கேற்றி திருப்பணியைத் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: ஆதிசங்கரர் வைதீக தர்மத்தை நிலைநாட்ட பாரதத்தின் நான்கு திசைகளில் சிருங்கேரி, துவாரகை, பத்ரி, பூரி மடங்களை ஸ்தாபனம் செய்தார். பின், காஞ்சிபுரத்தில் மூலாம்னாய ஸ்ர்வ ஜன பீடம் அமைத்து அங்கே மகா சமாதி அடைந்ததாக கூறப்படுகிறது. இந்த பரம்பரையில் வந்தவர் ஸ்ரீகாஞ்சி மகா பெரியவர் சந்திர சேகரேந்திர சரசுவதி. அவர் பூத உடலில் இருக்கும் போதே நடமாடும் தெய்வமாகப் போற்றப்பட்டவர். அவர் நிகழ்த்திய உரையாடல்கள் தெய்வத்தின் குரல் புத்தகமாக வெளிவந்திருக்கிறது. அவருக்கு தனிக்கோயில் எழுப்புவது மிக சிறந்த காரியமாகும்.
இதயத்தின் தூய்மையான அன்பில்தான் மதம் வாழ்கிறது. தீர்த்த தலங்கள் புனித பொருட்களாலும் மகான்களாலும் நிரம்பி இருக்கின்றன. மகான்கள் வாழ்கின்ற இடத்தில் கோயில் இல்லை என்றாலும் அவை புனிதமானவை தான். எல்லா வழிபாடுகளும் உணர்த்துவது மனத்தூய்மையையும் பிறருக்கு நன்மை செய்வதையும் தான். சிலை வடிவங்களில் மட்டும் இறைவனை காண்பது, பக்தியின் ஆரம்ப நிலை. ஏழைகள், பலவீனமானவர்கள் நோயாளிகள் ஆதரவற்றவர்களிடத்தில் இறைவனை காண்பதே, உண்மையான இறைவனை காண்பது ஆகும். அப்படி உதவி செய்வதே, இறைவனுக்கு செய்யும் தொண்டு. அதில் தான் இறைவன் மகிழ்ச்சி அடைகிறார். இத்தகைய பணிகளை செய்து வருகிறது மதுரையின் அட்சய பாத்திரம். மக்கள் சேவை மகேசன் சேவையாக, மனிதரில் இறைவனை காணும் பணியை பல ஆண்டாக செய்து வரும் இவர்களது பணியும் முயற்சியும் பாராட்டுதலுக்கு உரியது. இந்த கோயிலோடு முதியோர் இல்லமும் அமையவுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது". இவ்வாறு அவர் பேசினார். மதுரை மட்டுமின்றி, தமிழ்நாடு முழுதும் இருந்து பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் ஸ்படிக மாலை, விபூதி பிரசாதம், ஸ்ரீமகா பெரியவா புகைப்படம், அழகர்கோவில் தோசை பிரசாதம் மற்றும் அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டது. மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு நிறுவனர் நெல்லை பாலு ஏற்பாடுகள் செய்திருந்தார்.