பதிவு செய்த நாள்
13
மார்
2025
10:03
தஞ்சாவூர்; தஞ்சாவூர் மாவட்டம் , கும்பகோணத்தில், அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம் மற்றும் தென் பாரத கும்பமேளா கும்பகோணம் மகாமகம் அறக்கட்டளை சார்பில், ஆன்மிக மறுமலர்ச்சி தொடர்பான கருத்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில், அகில பாரதிய சந்நியாசிகள் சங்கத்தின் நிறுவனர் ஸ்ரீமத் சுவாமி ராமானந்த மஹராஜ், மன்னார்குடி செண்டலங்கார செண்பகமன்னார் சம்பத்குமார் ராமானுஜ ஜீயர் சுவாமிகள், மதுரை சிவானந்த ஆசிரமம் தலைவர் பூஜ்யஸ்ரீ சுவாமி சுந்தரானந்த சரஸ்வதி சுவாமிகள்.
சிவராமபுரம் வாயு சித்த ராமானுஜ ஜீயர் சுவாமிகள், திருவண்ணாமலை சுவாமி சிவராமானந்தா, உளுந்துார்பேட்டை யதீஸ்வரி நித்ய விவேக ப்ரியா அம்பா, தென்பாரதக் கும்பமேளா மகாமகம் அறக்கட்டளை தலைவர் சவுமியநாராயணன், செயலர் சத்திய நாராயணன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். விழாவில், மகாமகம் 2028 லோகோவை, விஷ்வ ஹிந்து பரிஷத்தின் அகில உலக அமைப்பு செயலர் மிலிந்த் பரண்டே வெளியிட்டு பேசியதாவது: ஹிந்து குடும்பங்களில் விவாகரத்து வழக்குகள் அதிகரித்து வருகின்றன. திருமணம் என்பது புனிதமான விஷயம், குடும்பம் சீரழிந்தால் சமுதாயம் சீரழிந்து விடும். மேற்கத்திய கலாசாரத்திற்கு மாறுவதை ஹிந்துக்கள் தவிர்க்க வேண்டும். ஆன்மிக விஷயங்களை கற்க வேண்டும். சர்ச், மசூதி போன்ற தலங்களை அந்தந்த மதத்தினர் சுதந்திரமாக நிர்வகிக்கின்றனர். ஆனால், ஹிந்து கோவிலை அரசு நிர்வகிப்பதால் பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. நாட்டிலுள்ள ஹிந்து கோவில்களை, ஹிந்துக்களின் நிர்வாகத்தில் தான் இருக்க வேண்டும். இதற்கான சட்டத்தை நீதிமன்றம் கொண்டுவர வேண்டும். ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஜனவரி மாதத்தில் இதற்கான திட்டத்தை முன்மொழிந்து உள்ளார். ஹிந்து கோவில்கள் ஹிந்துக்களுக்கே என்ற கோஷம் நாடெங்கும் பரவ வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.