பதிவு செய்த நாள்
14
மார்
2025
07:03
பல்லடம்; பல்லடம் அடுத்த மாணிக்கபுரம் கிராமத்தில், அண்ணமார் எனப்படும் பொன்னர், சங்கர் கோவில் கும்பாபிஷேக விழா, 9ம் தேதி திருவிளக்கு வழிபாட்டுடன் துவங்கியது. கடந்த 10ம் தேதி மாலை, 7:00 மணிக்கு, முதல் கால யாகபூஜை, 108 திரவியாகுதி, திருமுறை விண்ணப்பம் ஆகியவையும், இரவு, 8.00 மணிக்கு, கருமத்தம்பட்டி சங்கமம் கலைக்குழுவின் ஒயிலாட்டம் நடந்தது. இரண்டு மற்றும் மூன்றாம் கால வேள்விகள், மருந்து சாத்துதல் ஆகியவை நடந்தன. காலை, 9:00 மணிக்கு, அண்ணமார், செல்லாண்டியம்மன், பெரியகாண்டியம்மன், பாலகணபதி, கருப்பராயன் கன்னிமார் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் அண்ணமார் சாமிகள் அருள்பாலித்தனர். விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.