பதிவு செய்த நாள்
16
மார்
2025
10:03
புதுச்சேரி; தீர்த்தவாரியில் எழுந்தருளிய மயிலம் சுப்ரமணியர் சுவாமி, தீவனுார் லட்சுமி நாராயணபெருமாள் சுவாமி புதுச்சேரியில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
புதுச்சேரியில் நடந்த மாசி மக கடல் தீர்த்தவாரியில் மயிலம் வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியர் சுவாமி மற்றும் புதுச்சேரி, தமிழகத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட சுவாமிகள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மயிலம் சுப்ரமணியர் சுவாமி, மிஷன் வீதியில் உள்ள கோவிலுக்கு சொந்தமான மடத்தில், எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். அதனையொட்டி, சுப்ரமணியர் சுவாமிக்கு, மயிலம் ஆதீனம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமி தலைமையில் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல், தீவனுார் லட்சுமி நாராயணபெருமாள் சுவாமி 15வது ஆண்டாக புதுச்சேரி மாசிமக கடல் தீர்த்தவாரியில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். புதுச்சேரி தியாகராஜா வீதி, சரஸ்வதி விலாச சபை மடத்தில் தங்கிய, லட்சுமி நாராயணபெருமாள் சுவாமிக்கு திருக்கல்யாண மகா உற்சவம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, மாலை சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது.