பதிவு செய்த நாள்
25
மார்
2025
03:03
கர்நாடகாவின் சர்க்கரை மாவட்டம் என்ற மாண்டியாவில் ஏராளமான பழங்கால கோவில்கள் உள்ளன. இங்குள்ள மத்துார் ஒரு காலத்தில் அர்ஜுனபுரி, கடம்ப சேத்ரா என்றும் அழைக்கப்பட்டது. மத்துார் ஒரு காலத்தில் கடம்ப வம்சத்தினரால் ஆளப்பட்டது. மத்துாரில் 800 ஆண்டுகள் பழமையான உக்ர நரசிம்மசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலை தரிசிக்கும் முன், அதன் வரலாற்றை பார்க்கலாம்.
மூர்க்கம்; உக்ர நரசிம்ம அவதாரத்தை பற்றி நிறைய கேள்விப்பட்டிருந்த அர்ஜுனன், விஷ்ணுவின் அவதாரமான கிருஷ்ணரிடம் தனது நரசிம்ம வடிவத்தை வெளிப்படுத்தும் படி கேட்டுக் கொண்டார். ‘நரசிம்மரின் தீவிரமும், மூர்க்கமும் யாராலும் தாங்க முடியாத அளவுக்கு அதிகமாக இருக்கும்’ என்று கிருஷ்ணர் பதில் அளித்தார். நரசிம்மருக்கு பதிலாக பிரம்மாவால் செதுக்கப்பட்ட ஒரு விக்ரகத்தில் தோன்றி, அர்ஜுனனுக்கு காட்சி கொடுக்க முடியும் என்று கூறினார்.
ஹிரண்யகசிபு; இதன்படி, பிரம்மாவின் வேண்டுகோளின் படி விஸ்வகர்மா, ஸ்ரீ உக்ர நரசிம்மரின் சிலையை வடிவமைத்து அர்ஜுனன் பூமிக்கு அனுப்பினார். இன்று மத்துார் என்று அழைக்கப்படும் இடத்தில் நரசிம்மரின் மிகவும் வலிமையான காட்சியை அர்ஜுனன் கண்டார். தற்போது கோவிலில் உள்ள நரசிம்மரின் சிலை எட்டு கைகளாலும், மூன்று கண்களாலும் சித்திகரிக்கப்பட்டுள்ளது. இரண்டு கைகளால் ஹிரண்யகசிபு நெஞ்சை கிழிப்பது போன்றும், மற்ற இரண்டு கைகள் குடலை வெளியே இழுப்பது போன்றும் சித்திகரிக்கப்பட்டுள்ளன. இந்த கோவிலில் உள்ள நரசிம்மரை வேண்டிக்கொண்டால் எதிரிகள் பார்வையில் இருந்து விடுபடலாம். நம்மை சுற்றி நடக்கும் தீமைகள் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இதனால் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
இடது பக்கம்; கோவிலில் நரசிம்மர் சிலை மட்டுமின்றி லட்சுமி நரசிம்மர், ராமர், லட்சுமணர், சீதாதேவி சிலைகளும் உள்ளன. பொதுவாக ராமரின் வலது பக்கத்தில் தான் ஹனுமன் இருப்பது போன்று சிலைகள் வடிவமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இந்த கோவிலில் ராமரின் இடது பக்கத்தில் காணப்படுகிறது. வரதராஜ சுவாமி, ரங்கநாயகி அம்மாள், கருடன், ராமஞ்சார்யா சிலைகளும் இங்கு அருள் பாலிக்கின்றன. திங்கள், புதன், வியாழன், வெள்ளி கிழமைகளில் கோவிலின் நடை காலை 8:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரையும்; மாலை 5:30 மணி முதல் இரவு 8:30 மணி வரையும் திறந்திருக்கும். செவ்வாய், சனி, ஞாயிறு, பொது விடுமுறை நாட்களில் காலை 10:30 மணி முதல் மதியம் 2:30 மணி வரையும்; மாலை 5:30 மணி முதல் இரவு 8:30 மணி வரையும் திறந்திருக்கும். கோவிலை பற்றி ஏதேனும் விபரம் தேவைப்பட்டால் அர்ச்சகர் நாராயண பட்டரை 98444 21338 என்ற மொபைல் நம்பரில் தொடர்பு கொள்ளலாம்.
எப்படி செல்வது?; பெங்களூரில் இருந்து மத்துார் 80 கி.மீ., தூரத்தில் அமைந்துள்ளது. சாட்டிலைட் பஸ் நிலையத்தில் இருந்து அடிக்கடி பஸ்கள் இயக்கப்படுகின்றன.மைசூரு செல்லும் ரயிலில் பயணம் செய்தால் மத்துார் ரயில் நிலையத்தில் இறங்கி கோவிலுக்கு செல்லலாம்.