பதிவு செய்த நாள்
25
மார்
2025
12:03
காரைக்கால்; சனி பகவான் சூரிய மண்டலத்தை சுற்றிவர அதிக நாட்களை எடுத்துக் கொள்கிறார். அதாவது ஒவ்வொரு ராசியிலும் உத்தேசமாக இரண்டரை ஆண்டுகள் வீதம், 12 ராசிகளையும் ஒருமுறை வலம்வர 30 ஆண்டுகளை எடுத்துக் கொள்வார். எனவேதான் சனிப் பெயர்ச்சி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. சில சமயங்களில், மூன்றாண்டுகள் ஒரே ராசியிலும், இரண்டு ஆண்டுகள் ஒரு ராசியிலும் இருப்பதும் உண்டு. இது அவ்வப்போது நிகழக்கூடும். சனி பெயர்ச்சி விழா தொடர்பாக பல்வேறு செய்திகள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக, 2025 மார்ச் 29ம் தேதி அன்று சனி பெயர்ச்சி நடைபெறும் என்ற தகவல் பரவி வருகிறது.
திருநள்ளாறு சனீஸ்வர பகவானை தரிசிக்க, வாரந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். இந்நிலையில், திருக்கணித பஞ்சாங்கத்தின்படி 2025 மார்ச் 29ஆம் தேதி சனிப்பெயர்ச்சி என்று கூறப்படுவதால் பக்தர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் காரைக்கால் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில், வாக்கிய பஞ்சாங்கம் முறைப்படி, வரும் 2026ம் ஆண்டில் தான் சனிப்பெயர்ச்சி விழா நடைபெறும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. காரைக்கால் மாவட்ட திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனீஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள்பலித்து வருகிறார். இக்கோவிலில் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை சனிப்பெயர்ச்சி விழா மிக விமர்சையாக நடைபெறும். அதன்படி, வரும் 29ம் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுவதாக தகவல் பரவி வருகிறது.
இது தொடர்பாக கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் வெளியிட்ட செய்திக்குறிப்பு; திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் சனி பெயர்ச்சி விழா தொடர்பாக பல்வேறு செய்திகள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக, 2025 மார்ச் 29ம் தேதி அன்று சனி பெயர்ச்சி நடைபெறும் என்ற தகவல் பரவி வருகிறது. திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் சுவாமி தேவஸ்தானம், சனீஸ்வரர் கோவிலில் ‘வாக்கிய பஞ்சாங்கம்’ முறையை பின்பற்றுகிறது. இந்த பாரம்பரிய கணிப்பு முறையின்படி 2026ம் ஆண்டிலேயே சனிப்பெயர்ச்சி நடைபெறும். எனவே, வரும் 29ம் தேதி வழக்கமாக நடைபெறும் தினசரி பூஜைகள் மட்டுமே நடைபெறும். சனி பெயர்ச்சி நடைபெறும் தேதி, நேரம் பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.