பதிவு செய்த நாள்
03
ஏப்
2025
11:04
புதுச்சேரி; புதுச்சேரி – திண்டிவனம் சாலை, பஞ்சவடீயில் அமைந்துள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில், பட்டாபிஷேக ராமச்சந்திர மூர்த்திக்கு, ராம நவமி உற்சவம் நேற்று துவங்கியது. இதையொட்டி, பூர்வாங்க பூஜைகள், யாகசாலையில் விசேஷ ஹோமங்கள், ஏழு கால சிறப்பு பூஜைகள் நடந்தது. இன்று காலை 7.00 மணிக்கு ராமச்சந்திர மூர்த்தி சன்னதியில் சீதா தேவி சமேத ராமச்சந்திர மூர்த்திக்கு விசேஷ லட்சார்ச்சனை நடக்கிறது. ராம நவமி உற்சவமான 6ம் தேதி காலை 7.00 மணிக்கு சீதா தேவி ராமச்சந்திர மூர்த்தி மற்றும் 36 அடி உயர பஞ்சமுக ஆஞ்சநேயர் சுவாமிக்கு 2 ஆயிரம் லிட்டர் பால், பன்னீர், சந்தனம் கொண்டு அபிஷேகம், விசேஷ திருமஞ்சனம் நடக்கிறது. அதை தொடர்ந்து, புஷ்பங்களால் அபிஷேகம் நடக்கிறது. காலை 9.00 மணிக்கு சிறப்பு நாதஸ்வர இன்னிசை நிகழ்ச்சி, கலைமாமணி ஆறுமுகம் குழுவினரின் வில்லிசை ராமாயண நிகழ்ச்சி, மாலை 4.30 மணிக்கு சீதா ராம திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவினர் செய்துள்ளனர்.