பதிவு செய்த நாள்
05
ஏப்
2025
04:04
திருமுக்கூடல்; திருமுக்கூடல், அப்பன் வெங்கடேச பெருமாள் கோவிலில், 25 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடத்த கோவில் நிர்வாகம் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அடுத்து பாலாறு, செய்யாறு, வேகவதி ஆகிய 3 ஆறுகள் சங்கமிக்கும் திருமுக்கூடல் பாலாற்று படுகையையொட்டி, தொல்லியல் துறை மற்றும் ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டிலான அப்பன் வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. மேலும், 9ம் நுாற்றாண்டை சேர்ந்த கல்வெட்டுகளும், அதில் அக்காலத்து மருத்துவ குறிப்புகளும் இக்கோவிலில் காணப்படுகின்றன. இந்த கோவிலுக்கு சுற்றுவட்டார கிராமங்கள் மற்றும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட பல பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வழிபாட்டுக்கு வந்து செல்வது வழக்கமாக உள்ளது.
ஆண்டுதோறும் ஐந்து உற்சவங்கள் விசேஷமாக நடைபெறுகிறது. அதில், தை மாதம் மாட்டுப் பொங்கல் அன்று நடைபெறும் பார்வேட்டை விழா மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோவிலில், 2000ம் ஆண்டில் கடைசியாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோவில் கொடி மரம் சேதம் அடைந்தும், மூலஸ்தானத்தின் விமான கோபுரம் மற்றும் சுற்றுச்சுவர் உள்ளிட்ட கட்டடப் பகுதிகள் வர்ணம் பூசாமல் பொலிவிழந்து காணப்படுகிறது. கோவில்களில் ஆகம விதிப்படி, 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்துவது வழக்கம். இக்கோவிலில் நீண்ட காலமாக கும்பாபிஷேகம் நடத்தாததால், பழைமை மாறாமல் புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் மற்றும் பக்தர்கள் உள்ளிட்டோர் வலியுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து, அக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் சீனிவாசன் கூறியதாவது: திருமுக்கூடல், வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த அறநிலையத்துறை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கோவிலில் சேதம் அடைந்த கொடி மரத்திற்கு மாற்றாக 35 அடி உயரம் கொண்ட புதிய கொடி மரம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக மரம் தேர்வு செய்தல் உள்ளிட்ட பணிகள் தீவீரமாக மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அதை தொடர்ந்து, தொல்லியல் துறையிடம் அனுமதி பெற்று கும்பாபிஷேகம் விழா நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.