பதிவு செய்த நாள்
07
ஏப்
2025
08:04
லக்னோ; ராம நவமியான நேற்று, அயோத்தி ராமர் கோவிலில் உள்ள குழந்தை ராமர் சிலை மீது சூரியக் கதிர்கள் பட்டு திலகம் போல் ஒளிர்ந்தது. இதை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.
ராமர் அவதரித்த தினமான ராம நவமி விழா, நாடு முழுதும் விமரிசையாக நேற்று கொண்டாடப்பட்டது. ராமர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. ராமர் பிறந்த இடமான உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் உள்ள பாலராமர் கோவிலிலும் சிறப்பு பூஜைகள், ராம கீர்த்தனங்கள் நடத்தப்பட்டன. ஏராளமான பக்தர்கள் இங்கு குவிந்ததால், வழக்கத்தைவிட நேற்று கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
ராம நவமியை ஒட்டி அங்குள்ள சரயு நதியில் புனித நீராடிய பக்தர்கள், கோவிலுக்குள் சென்று பாலராமரை வழிபட்டனர்.மதியம் 12:00 மணிக்கு, பாலராமர் நெற்றியில் நேரடியாக திலக வடிவில் படர்ந்த சூரிய ஒளியை, பக்தி பரவசத்துடன் ஏராளமானோர் தரிசித்தனர். அப்போது குழந்தை ராமருக்கு சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டன. சூரிய ஒளி ராமரின் நெற்றியில் மூன்று நிமிடங்கள் நீடித்தது. பக்தர்கள், நேற்று இரவு வரை பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். அவர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. மாலையில் இரண்டு லட்சம் நெய் தீபங்கள் கோவில் வளாகத்தில் ஏற்றப்பட்டன. கட்டுக்கடங்காமல் திரண்ட கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் பணியில் துணை ராணுவத்தினர் ஈடுபட்டனர். லக்னோவில் உள்ள பிரசித்தி பெற்ற சந்திரிகா தேவி, மங்காமேஷ்வர், காளி பாரி மற்றும் சைலானி மாதா கோவில்களிலும் ராம நவமியை ஒட்டி ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
கோரக்பூரில் உள்ள கோரக்நாத் கோவிலுக்கு சென்ற முதல்வர் யோகி ஆதித்யநாத், பாரம்பரிய கன்னிகா பூஜையை நிகழ்த்தினார். துர்காதேவியின் வடிவமாக அலங்கரிக்கப்பட்ட ஒன்பது சிறுமியருக்கு அவர் பாதபூஜை செய்தார். வாரணாசியில் உள்ள ராமர் கோவில்களில், அதிகாலை முதல் இரவு வரை நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்தனர். அங்கு நடத்தப்பட்ட ராமாயண பாராயணங்கள் மற்றும் பக்தி கீர்த்தனைகள் பக்தர்களை பெரிதும் கவர்ந்தன. சம்பல் மாவட்டம் சந்தவுசியில் உள்ள 51 அடி ராமர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
ஜார்க்கண்டில் பதற்றம் நிறைந்த ராஞ்சி, ஜாம்ஷெட்பூர், கிரிதி, ஹசாரிபாக் போன்ற மாவட்டங்களில் போலீசார் பாதுகாப்புடன் ராம நவமி கொண்டாட்டங்கள் நடந்தன. அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும் வகையில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மேற்கு வங்கத்தில், பா.ஜ., மற்றும் திரிணமுல் காங்கிரஸ் சார்பில் தனித் தனியாக பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.