பதிவு செய்த நாள்
07
ஏப்
2025
08:04
துவாரகா; ‘ரிலையன்ஸ்’ நிறுவன இயக்குநர் அனந்த் அம்பானி, தன் 30வது பிறந்த நாளை முன்னிட்டு, குஜராத்தின் ஜாம்நகரில் இருந்து துவக்கிய ஆன்மிக பாதயாத்திரையை துவாரகாவில் உள்ள துவாரகாதீஷ் கிருஷ்ணர் கோவிலில் நேற்று நிறைவு செய்தார். ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானி, நாட்டில் உள்ள பிரபல ஆன்மிக தலங்களான பத்ரிநாத், கேதார்நாத் போன்றவற்றுக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
பிறந்த நாள்; சமீபத்தில், பிரயாக்ராஜில் மஹா கும்பமேளாவில் பங்கேற்று புனித நீராடினார். உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம், நாட்டின் மிகப்பெரிய புதிய பசுமை எரிசக்தி திட்டங்கள் ஆகியவற்றை அனந்த் அம்பானி கவனித்து வருகிறார். தொழில்களை கவனித்து வரும் அதே வேளையில், கிருஷ்ணர் மீதான பக்தியால் தன் பிறந்த நாளுக்கு முன் துவாரகாவுக்கு நடந்தே சென்று வழிபடுவது என முடிவு செய்தார். அதற்கான பயணத்தை தன் குடும்பத்தின் பூர்வீக ஊரான ஜாம்நகரில் இருந்து கடந்த மார்ச் 29ல் துவக்கினார்; 170 கி.மீ., பயண தொலைவை தினமும் ஏழு மணி நேரம், இரவு துவங்கி அதிகாலை வரை 20 கி.மீ.,நடந்தார்.
ராம நவமி நாளான நேற்று துவாரகாதீஷ் கோவிலில் தன் பயணத்தை அனந்த் அம்பானி நிறைவு செய்தார். நட்சத்திரப்படி நேற்று அனந்த் அம்பானியின்பிறந்த நாளும் கூட. நம்பிக்கை வைத்தால் இறையருள் கிட்டும் என்ற எண்ணத்தால் துாண்டப்பட்டு இந்த நீண்ட பாதயாத்திரையை அனந்த் அம்பானி மேற்கொண்டார். வெறும் சடங்கிற்காக இதை அவர் மேற்கொள்ளவில்லை; கிருஷ்ணரின் அருளுக்காக தன்னை அர்ப்பணித்தார். சனாதன தர்மத்தின் உயர்ந்த லட்சியங்களில் சரணடைந்தார்.
பரபரப்பான வாழ்க்கை; அரிய ஹார்மோன் கோளாறு, அதனால் உடல் எடை அதிகரிப்பு, நுரையீரல் நார் திசு பிரச்னை, ஆஸ்துமா போன்ற பாதிப்புகள் இருந்த நிலையிலும் இந்த அசாதாரண பாதயாத்திரையை அவர் மேற்கொண்டார். பரபரப்பான வாழ்க்கை, தொடர் கவனச் சிதறல்கள் மற்றும் மாறிவரும்மதிப்பீடுகளின் உலகில், அனந்த் அம்பானியின் துவாரகா நோக்கிய நடைபயணம் தெளிவு, துணிவு மற்றும் உறுதியின் அரிய செயலாக பார்க்கப்படுகிறது.