பதிவு செய்த நாள்
07
ஏப்
2025
08:04
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் திருவேளுக்கை அழகிய சிங்க பெருமாள் கோவிலில், ராமநவமி உத்சவம் நேற்று நடந்தது. இதில், நேற்று காலை 11:00 மணிக்கு ராமபிரானுக்கு திருமஞ்சனம், சிறப்பு அலங்காரம் குலசேகர ஆழ்வார் பாடிய பெருமாள் திருமொழி தீர்த்தம் கோஷ்டி வினியோகமும், மாலை கண்ணாடி அறையில் சேவை ஆஸ்தானம் நடந்தது.
இதில், ராமர், லட்சுமணர், சீதா, ஆஞ்சநேயர் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
காஞ்சிபுரம் விளக்கொளிபெருமாள் கோவிலில் நடந்த ராமநவமி விழாவில், ஸ்ரீதேவி, பூதேவியருடன் தீபபிரகாசர் என அழைக்கப்படும் விளக்கொளி பெருமாள் அனுமந்த வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காஞ்சிபுரம், ஓரிக்கை, ராணுவ சாலை, முல்லை நகர், தாமரை வீதியில் அமைந்துள்ள பக்த ஆஞ்சநேயர் மற்றும் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் 30ம் ஆண்டு ராமநவமி விழா நேற்று நடந்தது.
விழாவையொட்டி நேற்று, காலை 8:00 மணிக்கு திருமஞ்சனமும், மாலை 6:00 மணிக்கு சிறப்பு யாகம், சீதா ராம திருக்கல்யாண உத்சவம் நடந்தது.
காஞ்சிபுரம் மேற்கு ராஜ வீதியில், கோதண்டராமர் பஜனை கோவிலில், ராமநவமி உத்சவம் கடந்த மாதம் 27 ம் தேதி துவங்கியது. விழாவையொட்டி ஆன்மிக சொற்பொழிவாளர்கள் தினமும், இரவு 7:00 மணிக்கு சொற்பொழிவாற்றினர்.
நேற்று காலை ராமநவமி ஏகதின லட்சார்ச்சனையும், மாலை சீதா ராமர் திருக்கல்யாண உத்சவமும் தொடர்ந்து, அனுமந்த வாகனத்தில் புறப்பாடும் நடந்தது.
இன்று, காலை 6:00 மணிக்கு கோபூஜையும், இரவு 7:00 மணிக்கு அனுமனின் அற்புதங்கள் என்ற தலைப்பில் சொற்பொழிவும், 8ம் தேதி மாலை 6:30 மணிக்கு ஊஞ்சல் சேவை உத்சவமும் நடக்கிறது.