அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் முதலை வாய் பிள்ளை மீட்ட ஐதீகப் பெருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஏப் 2025 11:04
அவிநாசி; ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர விழாவில் முதலை வாய் பிள்ளை மீட்ட ஐதீக பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலின் தல வரலாறு அந்தணர் தெருவில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் வந்தபோது எதிர் எதிர் வீட்டில் ஒரு வீட்டில் மங்கல இசையும் மற்றொரு வீட்டில் அழுகை ஒலியும் வந்தது. சுந்தரமூர்த்தி சுவாமிகள் இது குறித்து கேட்க எதிரெதிர் வீட்டு பாலகர்கள் ஒரே வயது உடையவர்கள் என்றும் மூன்று ஆண்டுகளுக்கு முன் தாமரை குளக்கரையில் விளையாடும் போது முதலை வந்து ஒரு சிறுவனை விழுங்கி சென்றது என கூறுகிறார்கள். முதலை உண்ட பாலகனின் பெயர் அவிநாசி லிங்கம். அவரின் பெற்றோர் பெயர் வேதப்பதுமை மற்றும் கங்காதர ஸர்மா என்றும் கூறுகிறார்கள். இதைக் கேட்டு சிறுவனை இழந்த வீட்டிற்கு சென்ற சுந்தரமூர்த்தி சுவாமிகள் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறி குளக்கரைக்குச் செல்கிறார். அங்கு குளம் வற்றி இருந்தது. முதலையும் இல்லை. சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஏற்றான் மறக்கேன் என்ற திருப்பதிகம் பாடி மழை பொழிந்து குளம் நிறைந்தது. நான்காம் பாடலின் போது மூன்று ஆண்டு வளர்ச்சியுடன் முதலை வாயிலிருந்து ஏழு வயது சிறுவனாக அவிநாசிலிங்கம் வெளியில் வந்தார். இந்த அற்புத நிகழ்வு நடைபெற்ற நாளான முதலையுண்ட பாலைகன் மீட்டெடுத்த விழா நேற்று கோவிலில் திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் அவிநாசியப்பர், கருணாம்பிகையம்மன், சுந்தரமூர்த்தி நாயனார் மற்றும் முதலையுண்ட பாடகனின் பெற்றோர்கள் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்று முதலை வாயிலிருந்து பாலகன் மீண்டு வந்த அற்புத நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிரவை ஆதீனம் கௌமார மடாலயம் குமரகுருபரசுவாமிகள், கூனம்பட்டி திருமடம் ஸ்ரீலஸ்ரீ ராஜ சரவணன் மாணிக்கவாசக ஸ்வாமிகள், செஞ்சேரிமலை முத்துராமலிங்க சுவாமிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முதலை வாய் பிள்ளை மீட்ட தல வரலாறு நிகழ்ச்சியை கண்டு பரவசம் அடைந்தனர். முன்னதாக நேற்று காலை சந்திரசேகர், சுந்தரமூர்த்தி நாயனார் மற்றும் 63 நாயன்மார்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அவிநாசி பழைய பஸ் ஸ்டாண்ட் எதிரில் உள்ள உமையஞ் செட்டியார் மடத்தில் ஸ்ரீ சுந்தரர் கட்டமுது பெருவிழா நடைபெற்றது.