பதிவு செய்த நாள்
11
ஏப்
2025
12:04
ஸ்ரீரங்கம் ; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் ஆதி பிரம்மோத்ஸவம் ஒன்பதாம் திருநாள் காலை சமாதானம் கண்டருளி தாயார் சந்நிதி உள்ளே செல்லுதல் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நம்பெருமாளும், தாயாரும் ஒருசேர இருப்பார்கள். பங்குனி உத்திரத்தினத்தன்று நடைபெறும் இந்த நிகழ்ச்சியை கண்டு, பெருமாளையும், தாயாரையும் ஒருசேர தரிசிக்கும் தம்பதிகளின் வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும் என்பது ஐதீகம். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் பங்குனி தேர் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவின் 9ம் நாளான இன்று நம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து தங்கப் பல்லக்கில் புறப்பட்டு, சித்திரை, உத்திர வீதிகளை வலம் வந்து, ஆழ்வான் திருச்சுற்று வழியாக தாயார் சன்னதியை வந்தடைந்தார். அங்கு மட்டையடி நடைபெற்ற பின்னர், சமாதானம் கண்டருளி தாயார் சன்னதி முன் உள்ள மண்டபத்தை அடைந்த நம்பெருமாள் அரங்கநாயகி தாயாருடன் சேர்த்தி சேவையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் வரும் 12ம் தேதி நடைபெறுகிறது.