பதிவு செய்த நாள்
11
ஏப்
2025
11:04
மயிலாடுதுறை; மயிலாடுதுறையில் பிரசித்தி பெற்ற 1500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் கோவில் பங்குனி உத்திர திருத்தேரோட்டம், பூம்புகார் எம்எல்ஏ, டிஆர்ஓ உள்ளிட்ட திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை திருஇந்தளூரில், 1500 ஆண்டுகள் பழைமை வாய்ந்ததும், 108 வைணவ திவ்ய தேசங்களில் 22-வது ஸ்தலமான பரிமள ரங்கநாதர் கோவில் அமைந்துள்ளது. காவிரிக்கரையில் பெருமாள் பள்ளி கொண்ட நிலையில் அமைந்துள்ள பஞ்ச அரங்க ஆலயங்களான ஸ்ரீரங்கப்பட்டினம், ஸ்ரீரங்கம், சாரங்கம், அப்பாதுரங்கம் என்ற வரிசையில் 5வது பஞ்ச ரங்க ஷேத்திரமாக பரிமள ரங்கநாதர் கோவில் போற்றப்படுகிறது. இந்த கோவிலில் இவ்வாண்டு பங்குனி உத்திர பெருவிழா கடந்த 3ம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. 9ம் திருநாளான இன்று திருத்தேரோட்டம் நடைபெற்றது. தாயாருடன் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் திருத்தேருக்கு எழுந்தருளினர். சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு திருத்தேரோட்டம் துவங்கி வைக்கப்பட்டது. பூம்புகார் எம்எல்ஏ நிவேதா எம் முருகன், டிஆர்ஓ. உமாமகேஸ்வரி, நகராட்சி நகர்மன்ற தலைவர் செல்வராஜ், கோவில் செயல் அலுவலர் ரம்யா உள்ளிட்ட திரளான பக்தர்கள் தேரைவடம் பிடித்து இழுத்தனர். கோவிந்தா, கோபாலா என்று பக்தர்களின் பக்தி முழக்கத்தடன் 4 ரத வீதிகளில் தேர் வலம் வந்து நிலையை அடைந்தது.