பதிவு செய்த நாள்
13
ஏப்
2025
06:04
சண்டிகர்,; அறுவடைத் திருநாளான ‘பைசாகி’ பண்டிகை பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் யூனியன் பிரதேசம் மற்றும் உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கோலாகலமாக இன்று கொண்டாடப்பட்டது. குருத்வாராக்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து, தரிசனம் செய்தனர்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் அமைந்துள்ள சீக்கியர்களின் புனிதத் தலமான பொற்கோவில், ஆனந்த்பூர் சாஹிப் ஸ்ரீகேஸ்கர் சாஹிப், பதிண்டா தக்த் தம்தாமா சாஹிப் மற்றும் பாட்டியாலா துக் நிவாரன் சாஹிப் உள்ளிட்ட குருத்வாராக்களில் மக்கள் குவிந்தனர். பைசாகி விழா அறுவடைத் திருநாள் மட்டுமின்றி 10வது சீக்கிய குருவான கோபிந்த் சிங் ‘கல்சா பந்த்’ எனப்படும் சீக்கிய வரிசை நிறுவப்பட்ட நாளாகவும் கொண்டாடப் படுகிறது. கடந்த 1699ம் ஆண்டு இதே நாளில், குரு கோபிந்த் சிங், புனித நகரமான ஸ்ரீஆனந்த்பூர் சாஹிப்பில் வெவ்வேறு ஜாதிகளைச் சேர்ந்தவர்களுக்கு ஞானஸ்நானம் செய்து ‘கல்சா பந்த் என்ற சீக்கிய வரிசையை உருவாக்கினார். பஞ்சாப் கவர்னரும், சண்டிகர் யூனியன் பிரதேச தலைமை நிர்வாகியுமான குலாப் சந்த் கட்டாரியா, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பைசாகி வாழ்த்து தெரிவித்துள்ளனர். குலாப் சந்த் கட்டாரியா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “பைசாகி பன்முக முக்கியத்துவம் வாய்ந்த பண்டிகை. ரபி பருவ அறுவடையைக் கொண்டாடுகிறோம். விவசாயிகள் தங்கள் கடின உழைப்பின் பலனை அறுவடை செய்து மகிழ்ச்சி அடையும் நேரம். இதேநாளில்தான், முகலாயர்களின் கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராகப் போராடவும், மனித மற்றும் மதச்சார்பற்ற நெறிமுறைகளைப் பாதுகாக்கவும் குரு கோவிந்த் சிங் தியாகம் செய்தார்,”என, கூறியுள்ளார். பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தன் மனைவியுடன் பாட்டியாலா துக் நிவாரன் குருத்வாராவில் வழிபாடு நடத்தினார். ஹரியானா முதல்வர் நயாப் சைனி, பஞ்சாப் மாநிலம் ஆனந்த்பூர் சாஹிப் குருத்வாராவில் நேற்று சிறப்பு பிரார்த்தனை செய்தார்.