சோளிங்கர்; ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த கொண்டபாளையத்தில் யோக நரசிம்ம சுவாமி மலைக்கோவில் அமைந்துள்ளது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக இந்த தலம் விளங்குகிறது. நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். கொண்டபாளையம் மலையடிவாரத்தில், பிரம்மதீர்த்தம் எனப்படும் தக்கான் குளம் அமைந்துள்ளது. யோக நரசிம்மரின் உற்சவ மூர்த்தியான பக்தவசித பெருமாள் கோவில், சோளிங்கர் நகரில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் சித்திரை பிரம்மோற்சவத்தை ஒட்டி, வரும் 2ம் தேதி பிரம்மோற்சவ கொடியேற்றம் நடைபெறும். அதை தொடர்ந்து, தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெறும். இதில், மே 6ம் தேதி இரவு கருட சேவையும், 8ம் தேதி வியாழக்கிழமை பிரசித்தி பெற்ற தேர் திருவிழாவும் நடைபெற உள்ளன. சித்திரை பிரம்மோற்சவத்தை ஒட்டி, கோவில் வளாகத்தில் பிரமாண்டமான பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. தேர் செப்பனிடும் பணிகளும் நடந்து வருகின்றன. கடந்த தை மற்றும் மாசி மாதங்களில், உற்சவர் பெருமாள் தக்கால் குளத்தில் தெப்பத்தில் எழுந்தருளினார். கோவில் நகரமான சோளிங்கரில், ஆண்டு முழுதும் பல்வேறு உற்சவங்கள் நடத்தப்பட்டாலும், சித்திரை பிரம்மோற்சவ தேர் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.