வள்ளியூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் நாளை தெப்ப உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13டிச 2012 11:12
வள்ளியூர்: வள்ளியூர் சுப்பிரமணியசுவாமி கோயில் கார்த்திகை தெப்ப உற்சவம் நாளை நடக்கிறது.வள்ளியூர் சுப்பிரமணியசுவாமி கோயில் முக்கிய திருவிழாக்களில் சித்திரை மாதம் நடக்கும் தேரோட்டமும், கார்த்திகை மாதம் நடக்கும் தெப்ப உற்சவமும் பிரசித்திபெற்றது. அதன்படி கார்த்திகை மாதம் கடைசி வெள்ளியான நாளை (14ம்தேதி) தெப்ப உற்சவம் வெகுவிமர்சையாக நடக்க இருக்கிறது. காலை 5 மணிக்கு விஸ்வரூப தரிசனகாட்சி நடக்கிறது. காலை 7 மணி முதல் 12 மணிவரை மூலவர் பாலசுப்பிரமணியசுவாமி தங்ககவசம் அணிந்து பக்தர்களுக்கு அருள்பாளிக்கிறார். தொடர்ந்து கும்ப அபிஷேகம், சந்தனகலபம், உச்சிகால பூஜையும் நடக்கிறது. மாலை 3 மணிக்கு உற்சவ பெருமான் முன் மண்டபத்தில் எழுந்தருள்கிறார்.மாலை 5 மணிக்கு வள்ளியூர் செல்வராஜ் பக்தி சொற்பொழிவும், இரவு 8 மணிக்கு நாகர்கோவில் கமலம் குழுவினரின் பஜனை நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 10மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை பூஜை நடக்கிறது. 10.30 மணிக்கு சுப்பிரமணியசுவாமி தெப்பத்தில் எழுந்தருள்கிறார். தெப்பத்தை 11 முறை சுவாமி சுற்றிவருகிறார். இரவு 12 மணிக்கு பெருமான் கோயிலுக்கு எழுந்தருளுகிறார். பிறகு வள்ளியம்மாளுடன் சுப்பிரமணியசுவாமி வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாளிக்கிறார். தெப்ப உற்சவத்தில் சுற்றுபகுதிகளை சேர்ந்த திரளானோர் பங்குகொள்கின்றனர். தெப்ப உற்சவத்தை முன்னிட்டு இரவு வள்ளியூர் காமராஜர் நற்பணி மன்றத்தின் சார்பில் திரைப்பட மெல்லிசை கச்சேரி நடக்கிறது. ஏற்பாடுகளை செயல் அலுவலர் கூடுதல் பொறுப்பு கிருஷ்ணகுமார், தக்கார் ராதாகிருஷ்ணன் மற்றும் மண்டகபடிதாரர்கள், கட்டளைதாரர்கள், காமராஜர் நற்பணி மன்றத்தினர் செய்து வருகின்றனர்.