பதிவு செய்த நாள்
12
மே
2025
01:05
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துாரில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு ஆண்டாள், ரெங்க மன்னார் ஆற்றில் இறங்கும் வைபவம் சிறப்புடன் நடந்தது.
இதனை முன்னிட்டு இன்று காலை 9:00 மணிக்கு கோயிலில் ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் ஆண்டாள் மஞ்சள் பட்டு உடுத்தி சேஷ வாகனத்திலும், ரெங்க மன்னார் பச்சை பட்டு உடுத்தி குதிரை வாகனத்திலும் எழுந்தருளினர். பின்னர் கோயிலில் இருந்து புறப்பட்ட ஆண்டாள், ரெங்கமன்னார் மாடவீதிகள், முக்கிய வீதிகள் சுற்றி மண்டபங்கள் எழுந்தருளி ஆத்துக்கடை சந்திப்பு வந்தடைந்தனர். அப்போது வானவேடிக்கைகளுடன் செண்டை மேளம் முழங்க பக்தர்கள் எதிர்கொண்டு வரவேற்றனர். காலை 10: 20 மணிக்கு ஆண்டாளை, ரெங்க மன்னார் 3 முறை சுற்றி வரும் வையாளி சேவை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வெங்கட்ராம ராஜா தலைமையில் செயல் அலுவலர் சக்கரையம்மாள், கோயில் பட்டர்கள் செய்திருந்தனர். வி.பி.எம்.எம்.கல்வி நிறுவனங்கள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
* வத்திராயிருப்பு சேதுநாராயண பெருமாள் கோயிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு பெருமாள் ஆற்றில் இறங்கும் வைபவம் நடந்தது. இதனை முன்னிட்டு இன்று அதிகாலை மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு திருமஞ்சன பூஜைகள் நடந்தது. பின்னர் கள்ளழகர் அலங்காரத்தில் பெருமாள் குதிரை வாகனத்தில் அர்ஜுனா நதியில் இறங்கி 3 முறை வலம் வந்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.