பதிவு செய்த நாள்
14
மே
2025
11:05
திருவொற்றியூர்; கல்யாண வரதராஜ பெருமாள் கோவில் பிரமோத்சவத்தின், முக்கிய நிகழ்வான கருட சேவை, நேற்று வெகு விமரிசையாக நடந்தது.
திருவொற்றியூர் காலடிப்பேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவில், 400 ஆண்டுகள் பழமையானது. இக்கோவிலின் பிரமோத்சவம், 11 ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களில் உத்சவர் பவள வண்ண பெருமாள், பல வாகனங்களில் எழுந்தருளி மாடவீதி வந்தார். விழாவின் முக்கிய நிகழ்வான, கருடசேவை நேற்று காலை நடந்தது. அதன்படி, சிறப்பு மலர் அலங்காரத்தில், உத்சவர் பவள வண்ண பெருமாள், ராஜ கோபுரம் வழியாக பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது, கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் ‘கோவிந்தா... கோவிந்தா...’ என விண்ணதிர முழங்கினர். பின், மாடவீதி உத்சவம் நடந்தது. மாலையில், உத்சவர் யாளி வாகனத்தில் எழுந்தருளினார். மற்றொரு முக்கிய நிகழ்வான திருத்தேர் உத்சவம், 17ம் தேதி நடக்கிறது. அதைத் தொடர்ந்து, 19ம் தேதி, தீர்த்தவாரி மற்றும் கொடியிறக்கம் நடக்கும். பின், ஐந்து நாட்கள் விடையாற்றி உத்சவம் நடக்க உள்ளது.