பதிவு செய்த நாள்
14
மே
2025
12:05
திருப்போரூர்; திருப்போரூர் அடுத்த படூர் ஊராட்சியில் உள்ள துலுக்கானத்தம்மன் கோவிலில், 23ம் ஆண்டு தீமிதி திருவிழா விமரிசையாக நடைபெற்றது. கடந்த மாதம் 28ம் தேதி பந்தக்கால் நட்டு திருவிழா துவங்கிய நிலையில், தீ மிதிக்கும் பக்தர்கள் அனைவரும், அம்மனுக்கு விரதம் இருந்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு நடந்த தீ மிதி திருவிழாவில், முன்னதாக பள்ளி சிறுவர்கள், பெண்கள் உள்ளிட்ட 78 பேர், படூர் பெரிய ஏரியில் இருந்து அம்மன் கரகம், தீச்சட்டி ஏந்தியவாறு உடுக்கை, பம்பை ஒலிக்க வீதி உலா புறப்பட்டு, துலுக்கானத்தம்மன் கோவிலை வந்தடைந்தனர். கோவில் முன், தயார் நிலையில் இருந்த தீக்குழியில் இறங்கி, பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். ஒரு சில பக்தர்கள், தங்களது குழந்தைகளை துாக்கிக் கொண்டு தீக்குழியில் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். இறுதியாக, பக்தர்கள் அம்மனை வழிபட்டு, தீக்குழியில் இருந்த நெருப்பை எடுத்துச் சென்றனர். எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க, தீமிதி திருவிழாவில் தீயணைப்பு துறையினர் மற்றும் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.