பதிவு செய்த நாள்
15
டிச
2012
10:12
கும்பகோணம்: கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவிலில் வஞ்சுளவல்லி சமேத சீனிவாசபெருமாள் கோவில் உள்ளது. புகழ்பெற்ற, 108 வைணவ தலங்களில், 20 தலமாகவும், சோழநாட்டு திருப்பதிகள், நாற்பதில், 14வது தலமாகவும் விளங்குகிறது. மணிமுத்தா நதி தீரத்தில் மாதவம் புரிந்த மேதாவி மகரிஷியின் பிரார்த்தனையை நிறைவேற்ற, அவருக்கு சிறுகன்னியாக வந்து அவதரித்த வஞ்சுளவல்லி தாயாரை, மானிட உருவத்தில் வந்து மனம் கொண்ட சீனிவாசபெருமாள், அதே கோலத்தில் காட்சியளிக்கும் தலமாக நாச்சியார்கோவில் உள்ளது.இங்கு ஆண்டுதோறும் முக்கோடி தெப்பத்திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டு, வரும், 17ம் தேதி கொடியேற்றத்துடன் முக்கோடி தெப்பத்திருவிழா துவங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான உலக பிரசித்தி பெற்ற கல்கருட சேவை நிகழ்ச்சி, 20ம் தேதி நடக்கிறது.ஆண்டுக்கு, இரண்டு முறை மட்டுமே பங்குனி மற்றும் மார்கழி மாதத்தில் நடக்கும் கல்கருட சேவை உலக பிரசித்தி பெற்றது. மூலவராகவும், உற்சவராகவும் அமைந்துள்ள கருடபகவான், 20ம் தேதி சிறப்பு புஷ்பலங்காரத்தில் 4,8,16,32,64 நபர்கள் படிப்படியாக உயர்ந்து தூக்கி, வாகன மண்டபம் எழுந்தருளும் நிகழ்ச்சி, பக்தர்கள் வெள்ளத்தில் கருடபகவான் நீந்தி வருவது போல் கண்கொள்ளாக்காட்சியாக இருக்கும்.வரும், 25ம் தேதி தெப்ப உற்சவம் நடக்கிறது.