பதிவு செய்த நாள்
02
பிப்
2011
06:02
கோபாலா, எனக்கு பசிக்கிறதே! யாராவது உணவு தாருங்களேன், என்று அரற்றினார் பிண்ணாக்கீசர்.இவர் ஒரு அத்திமரப் பொந்தில் வசித்து வந்தார். கார்காத்தார் என்ற குலத்தில் இவர் அவதரித்ததாகச் சொல்கிறார்கள். இவருக்கு தந்தை கிடையாது. கன்னித்தாய் ஒருத்தி இறையருளால் இவரைப் பெற்றெடுத்தாள். அவரைப் பற்றிய தகவல்கள் இல்லை. குழந்தையைப் பெற்றெடுத்த அந்தத்தாய் எந்நேரமும் இறை சிந்தனையிலேயே இருப்பாள். கோயில்களுக்குச் சென்று அங்கேயே தங்குவார். பிரசாதம் தான் உணவு. கோயிலுக்கு வருவோர் போவோரும் உணவளிப்பர். இதை மட்டுமே சாப்பிட்டு வளர்ந்ததால், பிண்ணாக்கீசருக்கு எவ்வித கெட்ட வழக்கங்களுக்கும் ஆளாக வழியில்லாமல் போனது.சமையல் என்பது முக்கியமான ஒரு விஷயம். பெண்ணோ ஆணோ வீட்டில் சமைக்கும் போது, நல்ல எண்ணங்களுடன் சமைக்க வேண்டும். நாம் என்ன எண்ணியபடி சமைக்கிறோமோ, அந்த எண்ணங்கள் உணவில் ஊறிப்போகும். நல்லதை எண்ணியிருந்தால், தெய்வ ஸ்லோகங்களைச் சொல்லியபடியோ, கேட்ட படியோ சமையல் செய்திருந்தால் அதை சாப்பிடுவோரின் உடல்நலன் மட்டுமின்றி உள்ளத்தின் நலனும் வளரும். டாக்டர் சொன்னபடி சரியான உணவு வகைகளை எடுத்துக் கொள்வோருக்கு கொழுப்பு, சர்க்கரை, உப்பு முதலிய சத்துக்கள் ரத்தத்தில் முன்பை விட அதிகரிக்கும். காரணம் என்ன தெரியுமா? எண்ணங்களின் வண்ணம் தான்! கெட்ட எண்ணங்கள், பிறரை வஞ்சிக்கும் குணம், பணத்தைப் பற்றிய நினைப்பு, அதைக் காப்பாற்றுதல் அல்லது பெருக்குதல் போன்ற சிந்தனைகளுடன் சமையல் செய்தால் பேராசையும், அந்த ஆசையை எட்டுவதற்கு என்னென்ன பாதகங்கள் செய்யலாம் என்ற எண்ணமே வளரும்.இத்தகைய எண்ணங்களுக்கு கோயில் பிரசாதத்தில் இடமில்லை. சாப்பிடும் முன் அந்த உணவை கடவுளுக்கு சமர்ப்பித்து விட்டு சாப்பிடுபவர்கள் நல்ல குணம், செழிப்புடன் திகழ்வார்கள். இதே போல், பிண்ணாக்கீசர் தன் தாய் கொடுத்த கோயில் பிரசாதத்தை மட்டுமே சாப்பிட்டு உயிர் வளர்த்தார். அவர் ருசிக்கு சாப்பிடுவதில்லை. பசிக்கு சாப்பிடுவார்.
இப்படி நற்சிந்தனைகளுடன் வளர்ந்த அவர், தன் தாயின் காலத்திற்குப் பிறகு கண்ண பரமாத்மாவின் நிரந்தர பக்தரானார். கண்ணா, கண்ணா, கண்ணா இதைத் தவிர அவர் வாயில் வேறு எதுவும் வராது. பசி வந்தால் கோபாலா, எனக்கு உணவு கொடேன், எனக் கதறுவார்.அந்நேரத்தில் யாராவது ஒருவர் பால், பழம் கொண்டு வந்து கொடுப்பார். ஒரு பழம், கொஞ்சம் பால்...அவ்வளவு தான் சாப்பிடுவார். பசி தீர்ந்து விடும். மீண்டும் மரப்பொந்தில் போய் அமர்ந்து, இறைவனைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்து விடுவார். இப்படியே காலம் கடந்த வேளையில், ஒருநாள் பாம்பாட்டி சித்தர் அவர் முன்பு தோன்றினார். சீடனே, பொந்தில் இருந்து வெளியே வா, என்றார். கண்ணால் பார்த்து நயன தீட்சை அளித்தார். கையால் தொட்டு ஸ்பரிச தீட்சை கொடுத்தார். கால்களால் அவருக்கு திருவடி தீட்சை கொடுத்தார். உலக நன்மையே உன் குறிக்கோளாக இருக்கட்டும் என்று உபதேசம் செய்து விட்டு மறைந்து விட்டார். குருவின் போதனையை நிறைவேற்ற கண்ணனை நினைத்து கடும் தவத்தில் ஆழ்ந்தார் பிண்ணாக்கீசர். இதனால் அவருக்கு அஷ்டமாசித்திகளும் கைகூடின. ஒருமுறை சிவ தியானத்திலும் அவர் ஆழ்ந்தார். தன் தவத்தின் முடிவில் நோயற்ற வாழ்வே பெரும் செல்வம் என்ற தத்துவத்தை அறிந்தார். நோயற்ற மக்களைக் குணப்படுத்த முடிவு செய்தார். அவரைப் பார்த்தாலே சிலருக்கு நோய்கள் பறந்தன. சிலரை அவர் தொட்டவுடன் நோய் குணமானது. சிலருக்கு மண்ணையே மருந்தாக அவர் கொடுத்தார். அவர் கொடுத்த மண்ணை வாயில் போட்டதும் சர்க்கரை போல நோயாளிகளுக்கு இனித்தது. மண்ணைத் தின்ற மாத்திரத்தில் நோய்களும் விலகின. இதனால், அவரைத் தேடி ஆயிரக் கணக்கானோர் வர ஆரம்பித்து விட்டனர். கேரளாவில் உள்ள நாங்கணாச் சேரி என்ற கிராமத்திற்கு அவர் சென்றார்.
தகரத்தைப் பொன்னாக்கும் ரகசியம், உடலை எத்தனை வயதானாலும் இளமையுடன் வைத்திருக்கும் காயகல்ப ரகசியம் ஆகியவற்றைப் படித்தார். அந்தக்கலையைப் படிப்பதற்காக பல இளைஞர்கள் அவரைத் தேடி வந்தனர். தங்களைச் சீடர்களாக ஏற்று, அந்த ரகசியங்களைக் கற்றுத் தருமாறு கேட்டனர். அந்த இளைஞர்கள் இந்த வித்தைகளைக் கற்று சுயநலத்துடனும், உலகை மிரட்டும் நோக்குடனும் செயல்படுவார்கள் என்பதை ஞானதிருஷ்டியால் உணர்ந்த சித்தர், அதற்கு மறுத்து விட்டார். மேலும், தனக்கு சீடர்களே வேண்டாம் எனச் சொல்லி விட்டார். பின்னர், ஒரு மரப்பொந்தில் தங்கிக் கொண்டார் சித்தர். அங்கிருந்தபடியே மக்களுக்கு வைத்தியம் செய்ய ஆரம்பித்தார். இந்த உடலில் கட்டப் பட்டிருக்கும் கோவணம் கூட இறைவனால் தரப்பட்ட இரவல் தான். உன் உயிர் பிரிந்து உன்னை எரிக்கவோ, புதைக்கவோ செய்தால் இந்த கோவணம் உன்னோடு வருமா? கோவணமும் இரவல் கொண்ட தூலம் இது என்று உடலைப் பற்றி அவர் பாட்டுப் பாடி மக்களை உலகப்பற்றில் இருந்து விடுவிக்க முயற்சியெடுத்தார். அவற்றைப் பாடல்களாக வடித்தார். ஒருநாள் அவர் சிவபூஜையில் ஆழ்ந்தார். அப்படியே சமாதி நிலைக்குச் சென்றவர், அந்த மரப்பொந்தை விட்டு வெளியே வரவில்லை. ஒரு காலத்தில் அந்தப் பொந்தும் அடைபட்டுப் போனது. சித்தர் சமாதியாகி விட்டார் என்பதை அறிந்த மக்கள், அந்த மரத்தையே அவரது சமாதியாகக் கருதி வழிபடத் துவங்கினர். 18 சித்தர்கள் தொடரை படித்த நாம், அவர்களை தினமும் மனதார வணங்கி, தங்கத்தின் மீதான ஆசையை ஒழிக்க அருள்புரியுமாறு வேண்டிக் கொள்ள வேண்டும்.