பதிவு செய்த நாள்
22
ஜூன்
2025
01:06
உடுமலை: உடுமலை அருகே, ரோட்டோரத்தில் மண்ணில் புதைந்து கிடந்த, 16ம் நுாற்றாண்டை சேர்ந்த புடைப்பு சிற்பத்தை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் கண்டறிந்தனர்.
திருப்பூர் மாவட்டம், உடுமலை, பொள்ளாச்சி ரோடு, கணபதிபாளையம் பிரிவு பகுதியில், புளியமரத்தின் கீழ், புடைப்புச்சிற்பங்களுடன் கூடிய பெரிய அளவிலான கல் இருந்துள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள், உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினருக்கு தகவல் கொடுத்தனர்.
இதனையடுத்து, மத்திய தொல்லியல் துறை (ஓய்வு) தொல்லியல் ஆய்வறிஞர் மூர்த்தீஸ்வரி, ஆய்வாளர்கள் அருட்செல்வன், சிவகுமார் ஆகியோர் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். தொல்லியல் ஆய்வறிஞர் மூர்த்தீஸ்வரி கூறியதாவது:
இந்த சிலை கி.பி. 16 அல்லது, 17ம் நூற்றாண்டுகளில், பாளையக்காரர்கள் காலத்தில் உருவாக்கப்பட்டவையாக இருக்கலாம். இது மண்ணில் பகுதியளவு புதைந்துள்ளது. மண்ணிலிருந்து, மூன்றடி உயரமும், நான்கடி அகலமும் கொண்ட, பெரிய கல்லில் வேட்டைக்குச் செல்வது போன்ற உருவமும், கைகூப்பி வணங்குவது போன்ற தோற்றத்திலும் வடிக்கப்பட்டுள்ளது.
இதற்கு வலது புறத்தில், பொறிக்கப்பட்ட சிலை உள்ளது. இடப்பக்கத்தில் பெண் உருவம் பொறிக்கப்பட்ட சிலை, மார்புக்கச்சை இல்லாமலும், ஆபரணங்கள் எதுவும் இல்லாமலும் இருக்கிறது.
காதில் அணிகலன்கள், கை முத்திரையுடன் காணப்படுகிறது. முகம் சிதிலமடைந்து காணப்படுகிறது. இந்தக் கல்லில் கல்வெட்டு எழுத்துக்கள் இருப்பதாக தெரியவில்லை.
இந்த சிலை, வைணவப்பெருமாள் கோயிலுக்கு வடிக்கப்பட்ட சிற்பங்களாக இருக்கலாம். அல்லது அருகாமையில் இருந்த கோவில் அழிந்திருக்கலாம். ராமர், லட்சுமணர் மற்றும் சீதாதேவி சிலையாக இருக்கலாம். இதனை வழிபாட்டிற்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.