பதிவு செய்த நாள்
30
ஜூன்
2025
12:06
பழனி; பழனி முருகன் கோவிலில் பக்தர்களுக்கு நாள் முழுதும் பிரசாதம் வழங்கும் திட்டம் நேற்று துவக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், பழனி முருகன் கோவிலில் நாள் முழுதும் அன்னதானம் வழங்கும் திட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று முதல் பழனி கோவில் வெளிப்பிரகாரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில், காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் திட்டத்தை உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி துவக்கி வைத்தார். அமைச்சர் சக்கரபாணி கூறுகையில், “பழனி கோவிலில் நாள் முழுதும் அன்னதானம் திட்டத்தில், 20 லட்சம் பக்தர்கள் பயனடைந்துள்ளனர். இதேபோல், பக்தர்களுக்கு நாள் முழுதும் பிரசாதம் வழங்கும் திட்டம், தமிழகத்தில் 25 கோவில்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், வெண்பொங்கல், சாம்பார், தக்காளி, லெமன், தயிர்சாதங்கள் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றுடன் காய்கறி கூட்டு, பாக்குமட்டை தட்டில் வழங்கப்படும். திட்டத்திற்கு ஆண்டுக்கு 4 கோடி ரூபாய் செலவு ஏற்படும்,” என்றார்.