பதிவு செய்த நாள்
18
ஜூலை
2025
11:07
ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. ஆடி செவ்வாயும், ஆடி வெள்ளியும் ஆடி மாதத்தின் கண்ணாக போற்றப்படுகிறது. ஆடிவெள்ளியன்று கோவில்களில் அம்மனை தரிசனம் செய்வது மேலான பாக்கியம். ஆடி மாதத்தில் வரும் வெள்ளி சிறப்பு மிக்கதாக கருதப்படுகிறது. ஆடி வெள்ளி நாட்களில் மாவிளக்கு ஏற்றி வழிபடுவதால், ஆரோக்கியம் சீராகும். அம்மனுக்கு கூழ்வார்த்தும்; மஞ்சள் அரைத்துப் பூசியும் வழிபடுவது சிறப்பான பலன்தரும். வீட்டில் மாலையில் ஐந்து முக தீபமேற்றி அம்பிகையை வழிபட வேண்டும். ஆடி வெள்ளி நாட்களில் பால் குடம், முளைப்பாரி எடுத்து வழிபடுவது சிறப்பான பலன்தரும் என்பது ஐதிகம். மாவிளக்கு ஏற்றி வழிபடுவதால், ஆரோக்கியம் சீராகும். பெண்கள் பலர் கூடி திருவிளக்கு பூஜை செய்வதும் சிறப்பானது. இந்த நாட்களில் கோயில்களிலும் அம்மனுக்கு விசேஷ அபிஷேகம், அலங்காரங்கள், பூஜைகள் செய்வர்.இன்று காய்கனி அலங்காரத்தில் அம்மனை தரிசிக்க ஆண்டு முழுதும் உணவுப் பஞ்சம் இருக்காது. மங்கலப்பொருட்கள் தானம் அளித்தால் துன்பம் நீங்கி நன்மை உண்டாகும். ஆடி வெள்ளியில் அம்மனை வழிபட நல்லதே நடக்கும்.
ஆடி வெள்ளியான இன்று, அம்பாளை வணங்கும் விதத்தில் இந்த ஸ்தோத்திரம் தரப்பட்டுள்ளது. பூஜையறையில் விளக்கேற்றி சர்க்கரைப் பொங்கல் அல்லது பால் பாயாசம் படைத்து இதைப் படிக்க எல்லா நலன்களும் உண்டாகும்.
* அபிராமித் தாயே! என்னை பெற்ற அன்னையே! வேதங்களின் வேராக இருப்பவளே! திரிபுர சுந்தரியே! சூரியன் போல் சிவந்த நிறம் கொண்டவளே! மின்னல் கீற்றாக ஒளி பொருந்தியவளே! தேவர்களாலும், முனிவர்களாலும் பூஜிக்கப்படுபவளே! உன் திருவடிகளைச்சரணடைந்து போற்றுகிறோம்.
* இளமையும், அழகும் நிறைந்தவளே! மனோன்மணி தாயே! பரமேஸ்வரர் அருந்திய விஷத்தை அமிர்தமாக மாற்றியவளே! தாமரை போன்ற மென்மையான பாதம் கொண்டவளே! என் இதயத்தில் வாழும் தெய்வமே! புகலிடமாய் இருப்பவளே! எங்களுக்கு செல்வவளத்தை தந்தருள வேண்டும்.
* மகிஷாசுரனின் ஆணவத்தை அழித்தவளே! நித்ய கல்யாணியே! சிவந்த கைகளில் வில், அம்பைத் தாங்கியவளே! பதினான்கு உலகையும் படைத்தவளே! விஷ்ணுவின் தங்கையே! ஞானச் சுடராக இருப்பவளே! பஞ்சபூதங்களையும் படைத்தவளே! மங்களத்தின் இருப்பிடமே! எங்களுக்கு மங்கள வாழ்வைத் தந்தருள்வாயாக.
* சிவனை விட்டு நீங்காதவளே! கரிய நிறத்தவளே! கொடியிடை கொண்டவளே! மலையரசன் மகளே! மயிலின் சாயல் பெற்றவளே! தர்ம தேவதையே! பொன்னாக ஜொலிப்பவளே! கண்மணியாக திகழ்பவளே! மும்மூர்த்திக்கும் தாயாக இருப்பவளே! ஈஸ்வரியே! கோமள வல்லியே! எங்களுக்கு நல்ல கல்வியறிவைத் தந்தருள வேண்டும்.
* பிரபஞ்சத்தின் தலைவியே! சங்கரரின் துணைவியே! வெற்றி அருளும் துர்க்கையே! ஆதிபராசக்தியே! திரிசூலம் தாங்கியவளே! பார்வதி தேவியே! அபயம் அளிக்கும்
அன்னையே! பதினாறு பேறுகளையும் அருள்பவளே! மதுரையில் ஆட்சி புரியும் மீனாட்சியே! காஞ்சி காமாட்சியே! காசி விசாலாட்சியே! எங்கள் குடும்பத்து பெண்களை தீர்க்க சுமங்கலியாய் வாழ வைக்க வேண்டும்.
* செல்வ வளம் தருபவளே! குறைவில்லாத கல்வி அருள்பவளே! புத்துணர்வுடன் வாழச் செய்பவளே! நெஞ்சில் வஞ்சம் இல்லாத நல்லோர் நட்பை தருபவளே! நல்லதை எல்லாம் வாரி வழங்குபவளே! மலர்கள் சூடிய கூந்தலைக் கொண்டவளே! உன் கடைக்கண்ணால் எங்களுக்கு நல்வாழ்வு தந்தருள்வாயாக.
* எங்கள் நெஞ்சில் வாழும் குலமகளே! மாதங்கியே! பைரவியே! பிறவா வரம் தருபவளே! மாதுளம்பூ போல சிவந்தவளே! மரகத மயிலே! மாணிக்கவல்லியே! மான் போன்ற மருண்ட விழிகள் கொண்டவளே! இமவான் மகளே! கிளி ஏந்திய கரத்தவளே! உன் அருளால் எல்லாரும் நலமாக வாழ பணிவுடன் வேண்டுகிறேன்.